/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
கடன் தொல்லையால் நபர் தற்கொலை; ஆறு மாதங்களுக்கு பின் அம்பலம்
/
கடன் தொல்லையால் நபர் தற்கொலை; ஆறு மாதங்களுக்கு பின் அம்பலம்
கடன் தொல்லையால் நபர் தற்கொலை; ஆறு மாதங்களுக்கு பின் அம்பலம்
கடன் தொல்லையால் நபர் தற்கொலை; ஆறு மாதங்களுக்கு பின் அம்பலம்
ADDED : ஜன 06, 2026 08:54 AM

மாண்டியா: தான் வசித்த வீட்டில் நபர் தற்கொலை செய்து கொண்டது, ஆறு மாதங்களுக்கு பின் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
மாண்டியா மாவட்டம், மத்துார் தாலுகாவின் தொட்ட அரசினகெரே கிராமத்தில் வசித்தவர் மஹதேவசாமி, 45. இவரது மனைவி பவித்ரா, 40. தம்பதிக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். மஹதேவசாமி, கிராமத்தின் பாரதிநகரில் சாலை ஓரத்தில் ஷெட் போட்டு, ஹோட்டல் நடத்தினார். இவர்கள் வாடகை வீட்டில் வசித்தனர்.
தொழிலுக்காக பல இடங்களில், கடன் வாங்கியிருந்தார். தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால், கடனை அடைக்க முடியவில்லை. இதனால் ஒன்றரை ஆண்டுக்கு முன், வீட்டை விட்டு வெளியேறினார். கணவரை கண்டுபிடிக்க மனைவி பல முயற்சிகளை செய்தார். போலீஸ் நிலையத்திலும் புகார் அளித்தார். போலீசார் தேடியும் எந்த தகவலும் கிடைக்கவில்லை.
ஓராண்டு கடந்தும் கணவர் வீடு திரும்பாததால், பிள்ளைகளின் எதிர்காலத்தை கருதி பவித்ரா பெங்களூருக்கு குடி பெயர்ந்தார். தனியார் தொழிற்சாலையில் பணியில் சேர்ந்தார்.
இதற்கிடையில், தொட்ட அரசினகெரே கிராமத்தில் மஹதேவசாமி வசித்த வீட்டு உரிமையாளர் மாயிகய்யாவின் மனைவி கீதா, வாடகைதாரர் மஹதேவசாமியின் தம்பி ரவியை தொடர்பு கொண்டு, பாக்கி வாடகையை செலுத்திவிட்டு, வீட்டை காலி செய்யும்படி கூறினார். அவரும் தன் அண்ணன் கிடைக்கும் வரை, கால அவகாசம் அளிக்கும்படி கேட்டுள்ளார்; வீட்டு உரிமையாளரும் சம்மதித்தார். வீட்டுக்கதவு மூடியே இருந்ததால், யாருக்கும் சந்தேகம் வரவில்லை.
நடப்பாண்டு பிப்ரவரியில், கோவில் திருவிழா இருப்பதால், வீட்டில் பெயின்ட் அடிக்க வேண்டும். எனவே வீட்டை காலி செய்யும்படி ரவியிடம் உரிமையாளர் கூறினார். இதனால், ரவி நேற்று மதியம் வீட்டில் உள்ள பொருட்களை எடுப்பதற்காக, அங்கு வந்தார். கதவை திறக்க முயற்சித்த போது, உள்ளே பூட்டியிருப்பது தெரிந்தது. அதன்பின் கதவை உடைத்து உள்ளே சென்ற பார்த்த போது, மஹதேவசாமி தற்கொலை செய்து கொண்டிருந்தது தெரிந்தது.
இது குறித்து, போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு வந்த கே.எம்.தொட்டி போலீசார், மஹதேவசாமியின் எலும்புகூட்டை மீட்டு, பரிசோதனைக்கு அனுப்பினர். அவர் ஆறு மாதங்களுக்கு முன், தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது .

