/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
வனப்பகுதியில் போலீஸ் காரை விட்டு நபர் ஓட்டம்
/
வனப்பகுதியில் போலீஸ் காரை விட்டு நபர் ஓட்டம்
ADDED : நவ 08, 2025 11:01 PM
சாம்ராஜ்நகர்: பண்டிப்பூர் புலிகள் சரணாலயத்துக்கு உட்பட்ட பகுதியில், போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபடுவதை பார்த்த ஒருவர், தொலைவிலேயே காரை நிறுத்திவிட்டு தப்பினார். காரும், அதில் இருந்த துப்பாக்கியும், ஐ போனும் பறிமுதல் செய்யப்பட்டன.
சாம்ராஜ்நகர் மாவட்டம், குண்டுலுபேட் தாலுகாவின், பண்டிப்பூர் புலிகள் சரணாலய வனப்பகுதியில், சோதனைச்சாவடி அருகில் நேற்று முன் தினம், அதிகாலை 3:30 மணியளவில் வனத்துறை அதிகாரிகள், வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அங்கிருந்து கொஞ்சம் தொலைவில் ஒரு கார் நீண்ட நேரம் நின்று கொண்டிருந்தது. அதை கவனித்த போலீசார், அருகில் சென்று பார்த்தனர். காரில் யாரும் இல்லை.
வாகன தணிக்கை செய்வதை பார்த்து, யாரோ பீதி அடைந்து அங்கிருந்து தப்பியிருக்கலாம் என போலீசார் சந்தேகித்தனர்.
கேஏ 42 என் 4696 என்ற பதிவு எண் கொண்ட அந்த காரை கைப்பற்றிய போலீசார், அதை சோதனையிட்டனர். காரில் ஒரு துப்பாக்கியும், ஐ போனும் கண்டுபிடிக்கப்பட்டது.
அவற்றை கைப்பற்றிய அதிகாரிகள், நீதிமன்றத்தில் ஒப்படைத்து அறிக்கை தாக்கல் செய்தனர். காரை விட்டு தப்பிய நபரை தேடி வருகின்றனர். கார் யாருக்கு சொந்தமானது என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

