UPDATED : அக் 18, 2026 12:00 AM
ADDED : அக் 17, 2026 11:04 PM

மைசூரு: தசரா திருவிழாவில் பலுான் விற்க வந்த 9 வயது சிறுமியை, பாலியல் பலாத்காரம் செய்து, கொடூரமாக கொலை செய்தவருக்கு மரண தண்டனை விதித்து, நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
கடந்த 2025 அக்டோபரில், தசரா திருவிழாவில் பலுான், விளையாட்டு பொருட்களை விற்க, கலபுரகியின் வியாபாரிகள் வந்தனர். இதில் ஒன்பது வயது சிறுமியின் குடும்பமும் ஒன்றாகும். பகலில் வியாபாரம் செய்வர். இரவு பொருட்காட்சி மைதானம் வளாகத்தில், கூடாரம் போட்டு தங்கினர்.
அக்டோபர் 8ம் தேதி, வழக்கம் போல வியாபாரத்தை முடித்து கொண்டு வியாபாரிகள் உறங்கினர். நள்ளிரவு தாய் அருகில் படுத்திருந்த சிறுமியை காணவில்லை.
எங்குமே மகளை காணாததால், மைசூரின் நஜர்பாத் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசாரும் சம்பவ இடத்துக்கு வந்து, சிறுமியை தேட துவங்கினர். மறு நாள் காலை பொருட்காட்சி மைதானத்தில் இருந்து, சிறிது துாரத்தில் சிறுமியின் நிர்வாண உடல், மணலில் அறைகுறையாக புதைக்கப்பட்ட நிலையில் கண்டு பிடிக்கப்பட்டது.
உடலை மீட்ட போலீசார், பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். அதில், சிறுமி பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாகி, கொடூரமாக கொலை செய்யப்பட்டது தெரிந்தது.
கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்த போலீசார், கார்த்திக், 32, என்பவரை கைது செய்தனர்.
மைசூரின் விரைவு நீதிமன்றத்தில் நடந்த விசாரணையில் கார்த்திக்கின் குற்றம் உறுதியானதால், அவரை, குற்றவாளி என, நீதிபதி அனில் வகாடே, அக்டோபர் 15ம் தேதி அறிவித்தார். தண்டனையை தள்ளி வைத்திருந்தார். நேற்று குற்றவாளிக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தினருக்கு, 13.5 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கும்படி, நீதிபதி உத்தரவிட்டார். சம்பவம் நடந்த ஒரே ஆண்டில், குற்றவாளிக்கு தண்டனை கிடைத்துள்ளது.
