/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
ஹிண்டல்கா சிறைக்குள் மொபைல் போன் வீசிய நபர்
/
ஹிண்டல்கா சிறைக்குள் மொபைல் போன் வீசிய நபர்
ADDED : ஜன 02, 2026 06:05 AM
பெலகாவி: பெலகாவி ஹிண்டல்கா சிறைக்குள், மர்ம நபர் ஒருவர் மொபைல் போன்களை வீசியெறிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில், கைதிகள் வி.ஐ.பி.,யாக நடத்தப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது.
இதில், பயங்கரவாதி ஜுஹாப் ஷகீல் மன்னா, கொலையாளி உமேஷ் ரெட்டி, தங்கத்தை கடத்திய தருண் கொண்டரு ஆகியோர் சர்வ சாதாரணமாக மொபைல் போன் பயன்படுத்தும் காட்சிகள் மாநில அரசுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தின. இதையடுத்து, சிறை அதிகாரியை சஸ்பெண்ட் செய்ததுடன், இருவரை அரசு பணியிடமாற்றமும் செய்தது.
அத்துடன், இந்த சிறையில் போலீசார் நடத்திய திடீர் சோதனையில், 33 மொபைல் போன்கள், 22 சிம் கார்டுகள், ஐந்து சார்ஜர்கள், நான்கு 'இயர் பட்ஸ்'கள், 49 ஆயிரம் ரூபாய் ரொக்கம், மூன்று கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
இந்நிலையில், பெலகாவி மாவட்டம் ஹிண்டல்கா சிறையிக்குள் கடந்த, 29ம் தேதி இரவு, சிறை உதவி கண்காணிப்பாளர் மல்லிகார்ஜுன கொன்னுார், ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது, சிறையின் ஒரு பகுதியில் இரு பார்சல்கள் கிடப்பதை கண்டார். அவற்றை பிரித்துப் பார்த்த போது, மொபைல் போன்கள் இருந்தன. உடன் அங்கு பணியில் இருந்த இன்ஸ்பெக்டர் கோத்தேயிடம், இதுகுறித்து விசாரிக்கும்படி தெரிவித்தார்.
இதையடுத்து, சிறைக்கு வெளியே உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர்.
அதில், 29ம் தேதி அதிகாலை 3:00 மணியளவில், முகமூடி அணிந்த நபர் ஒருவர், சிறைச்சாலை அருகே வந்து, இரண்டு பாக்கெட்டுகளை வீசி எறிந்து விட்டு, அங்கிருந்து ஓடிய காட்சி பதிவாகியிருந்தது.
இதுதொடர்பாக ஹிண்டல்கா ரூரல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

