நண்பரின் வேர்க்கடலையை விற்று கொலையும் செய்த நபர் கைது
நண்பரின் வேர்க்கடலையை விற்று கொலையும் செய்த நபர் கைது
UPDATED : அக் 23, 2026 12:00 AM
ADDED : அக் 22, 2026 08:44 PM

கதக்: நண்பருக்கு சொந்தமான வேர்க்கடலையை விற்றதுடன், அவரை கொலை செய்த நபர் போலீசாரிடம் சிக்கினார்.
கதக் மாவட்டம், நர்குந்த் தாலுகாவின், நுரகோடா கிராமத்தில் வசித்தவர் தியாமப்பா கோஜனுாரு, 62. இவர் தன் நிலத்தில், வேர்க்கடலை பயிரிட்டிருந்தார். விளைச்சலும் செழிப்பாக இருந்தது. வேர்க்கடலையை அறுவடை செய்தார். அப்போது், விலை குறைவாக இருந்ததால், விலை அதிகமாகும் போது, விற்க முடிவு செய்திருந்தார்.
இவரும், அதே கிராமத்தில் வசிக்கும் சரணப்பா நரகுந்த், 55, என்பவரும் நண்பர்கள். சரணப்பா நர்குந்த் சொந்தமாக குடோன் எனும் தானிய சேமிப்பு கிடங்கு வைத்துள்ளார். விவசாயிகள் தங்கள் விளைபொருட்களுக்கான விலை கிடைக்காத போது, இந்த குடோனில் வைத்திருந்து, விலை அதிகரிக்கும் போது விற்பது வழக்கம்.
அதே போல தியானப்பாவும், வேர்க்கடலையை தன் நண்பரின் குடோனில் வைத்திருந்தார். சரணப்பா நர்குந்த், இந்த வேர்க்கடலையை, 2.80 லட்சம் ரூபாய்க்கு, திருட்டுத்தனமாக விற்று பணம் பெற்று, தன் சொந்த தேவைக்கு பயன்படுத்தி விட்டார்.
இதற்கிடையே தியானப்பா, வேர்க்கடலையை விற்க ஏற்பாடு செய்தார். இது, சரணப்பாவுக்கு பயத்தை ஏற்படுத்தியது. நண்பர் வேர்க்கடலையை கொண்டு செல்ல குடோனுக்கு வந்தால், தன் திருட்டுத்தனம் தெரிந்து விடும் என்பதால், அவரை கொலை செய்ய திட்டம் தீட்டினார்.
கடந்த 8ம் தேதி, நர்குந்த் நகருக்கு சென்று வருவதாக, வீட்டினரிடம் கூறி, தியானப்பா வெளியே சென்றார். அப்போது அவரை வயலுக்கு அழைத்து சென்ற சரணப்பா, கோடாரியால் தலையில் தாக்கி கொலை செய்தார். உடலை கால்வாய் அருகில் புதைத்து தப்பினார்.
வெளியே சென்ற தியானப்பா, இரண்டு நாட்களாக வீடு திரும்பாததால் பீதியடைந்த குடும்பத்தினர், அக் டோபர் 10ல், நர்குந்த் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் கிராமத்துக்கு வந்து விசாரணை நடத்தினர்.
அப்போது தியானப்பா காணாமல் போன தினத்தன்று, சரணப்பாவுடன் சென்றது தெரிந்தது. அதன் பின் அவரை விசாரித்த போது, கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். அவரை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.
