UPDATED : அக் 23, 2026 12:00 AM
ADDED : அக் 22, 2026 08:44 PM

பெங்களூரு: பெங்களூரில், நள்ளிரவை தாண்டியும் பட்டாசு வெடித்து தொல்லை கொடுத்ததற்கு, நடிகை ரம்யா அதிருப்தி தெரிவித்துள்ளார். சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி, போலீசாரை வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து, நேற்று அவர் கூறியதாவது:
சமீபத்தில் முடிந்த தசரா பண்டிகையை காரணம் காட்டி, நான் குடியிருக்கும் பன் வோர்ல்டு அடுக்கு மாடி வளாகத்தில் அதிகாலை 3:00 மணி வரை, பட்டாசு வெடி த்து கொண்டாடினர். அதிகமான சத்தத்துடன் பாடல்களை இசைத்து, பொதுமக்களுக்கு தொல்லை கொடுத்தனர். இது கண்டிக்கத்தக்கது.
சுற்றிலும் மூத்த குடிமக்கள், குழந்தைகள் அதிகம் வசிக்கின்றனர். இது போல பட்டாசு வெடித்து, பெரும் சத்தத்துடன் பாடல்களை இசைப்பது சரியல்ல.
இரவு 10:00 மணி முதல், காலை 6:00 மணி வரை, பொது இடங்களில், பட்டாசு வெடிப்பதற்கு, உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு அனுமதி இருந்தாலும், நள்ளிரவுக்கு பின், ஒலிபெருக்கி பயன்படுத்த சட்டத்தில் இடம் இல்லை.
இதை அறிந்தும், விதிகளை மீறி பட்டாசு வெடித்தும், அதிக சத்தமாக பாடல்களை இசைத்தும் பொதுமக்களுக்கு தொந்தரவு கொடுத்தனர்.
பண்டிகை நாட்கள் அல்லது சிறப்பு சந்தர்ப்பங்களில், இத்தகைய தொல்லைகளை, பொதுமக்கள் ஓரளவு சகிக்க வேண்டும் என்பது, எனக்கு புரிகிறது. ஆனால் ஒவ்வொரு நிகழ்ச்சியிலும், சகித்து கொள்ள வேண்டும் என, எதிர்பார்ப்பது சரியல்ல.
விதிகளை மீறி, நிகழ்ச்சி நடத்திய பன் வொர்ல்டு நிர்வாகத்தினர் மீது, பெங்களூரு போலீசார் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
