UPDATED : அக் 23, 2026 12:00 AM
ADDED : அக் 22, 2026 08:24 PM

தட்சிண கன்னடா: மகனை காப்பாற்ற சென்ற தாய் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார்.
தட்சிண கன்னடா மாவட்டம், மூடபிதரே தாலுகாவின் வர்ணபெட்டு கிராமத்தில் வசித்தவர் மெர்சி மஸ்கரேனஸ், 45. இவரது மகன் ஷோன் மஸ்கரேனஸ், 18.
இவர், மூடபிதரேவில் உள்ள தனியார் கல்லுாரியில் இரண்டாம் ஆண்டு பி.யு.சி., படித்து வந்தார். மெர்சியின் கணவர் இறந்து விட்டார். தாயும், மகனும் விவசாயம் செய்தனர்.
ஷோன், நேற்று முன்தினம் இரவு, துவைத்த உடைகளை வீட்டின் முன் கட்டப்பட்டிருந்த இரும்பு கம்பியில் காய வைக்க சென்றார். அந்த பகுதியில் இருந்த மின் கம்பி அறுந்து, இரும்பு கம்பியியின் மீது உராய்ந்து கொண்டிருந்தது.
இதை அறியாத ஷோன், துணியை உலர்த்த கம்பியை தொட்ட போது, மின்சாரம் பாய்ந்து அலறினார். மகனை காப்பாற்றும் நோக்கில் அவரை பிடித்து இழுத்த போது, தாய் மெர்சி மீதும் மின்சாரம் பாய்ந்தது. இருவரும் உயிரிழந்தனர்.
நேற்று காலை, தோட்ட பணியாளர் வந்த போது, தாயும், மகனும் இறந்து கிடந்ததைப் பார்த்து, போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அவர்கள் அங்கு வந்து, உடல்களை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி, விசாரிக்கின்றனர்.
