/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
மனைவியை கொன்றதாக சிறைக்கு போனவர் 5 ஆண்டுக்கு பின் உயிருடன் பார்த்து அதிர்ச்சி
/
மனைவியை கொன்றதாக சிறைக்கு போனவர் 5 ஆண்டுக்கு பின் உயிருடன் பார்த்து அதிர்ச்சி
மனைவியை கொன்றதாக சிறைக்கு போனவர் 5 ஆண்டுக்கு பின் உயிருடன் பார்த்து அதிர்ச்சி
மனைவியை கொன்றதாக சிறைக்கு போனவர் 5 ஆண்டுக்கு பின் உயிருடன் பார்த்து அதிர்ச்சி
ADDED : ஏப் 04, 2025 06:44 AM

மைசூரு: மனைவியை கொன்றதாக, நான்கு ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருந்தவர், ஜாமினில் வெளியே வந்தபோது, மனைவி உயிருடன் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இது தொடர்பாக விசாரித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு, எஸ்.பி.,க்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திடீர் மாயம்
மைசூரு குஷால் நகரின் பசவனஹள்ளியை சேர்ந்தவர் சுரேஷ் - மல்லிகே தம்பதி. இவர்களுக்கு திருமணமாகி 18 ஆண்டுகளாகின்றன. இரு குழந்தைகள் உள்ளனர். 2020ம் ஆண்டு நவம்பரில் திடீரென மல்லிகேயை காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், குஷால் நகர் போலீசில், அவரது கணவர் புகார் செய்தார்.
பல இடங்களில் தேடியும், விசாரணை நடத்தியும் மல்லிகே எங்கு சென்றார் என்று போலீசாருக்கு தெரியவில்லை. ஏழு மாதங்களுக்கு பின், 2021 ஜூனில், பெண்ணின் எலும்புக்கூடு கிடைத்துள்ளது. அதை அடையாளம் காட்ட வரும்படி, கணவர் சுரேஷை பெட்டதபுரா போலீசார் அழைத்து சென்றனர்.
வாகனத்தில் வரும் போதே, அது மல்லிகே தான் என்பதை கூறும்படி போலீசார் மிரட்டியுள்ளனர். போலீசார் கூறியபடியே சுரேஷும் கூறினார். அதன்பின், மனைவியை கொன்றதாக மிரட்டி வாக்குமூலம் வாங்கி, அவரை சிறையில் அடைத்தனர்.
இவ்வழக்கு விசாரணையின் போது, சுரேஷ் தரப்பு வக்கீல் பாண்டு பூஜாரி வாதிடுகையில், 'கண்டுபிடிக்கப்பட்ட எலும்புக்கூடை டி.என்.ஏ., சோதனை நடத்த வேண்டும்' என்று கேட்டு கொண்டார். டி.என்.ஏ., அறிக்கையில், சுரேஷ் மனைவியின் எலும்புக்கூடு அல்ல எனபது தெரியவந்தது. ஆனாலும், சுரேஷ் நான்கரை ஆண்டுகள் சிறையில் இருந்தார்.
வக்கீல் பாண்டு, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் முறையிட்டு சுரேஷுக்கு, கடந்தாண்டு இறுதியில் ஜாமின் பெற்றார். கடந்த ஏப்., 1ம் தேதி, நண்பர்களுடன் மடிகேரியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் சுரேஷ், டீ குடித்து கொண்டிருந்தார். அப்போது தொலைவில் ஒரு பெண்ணை பார்த்தார்; எங்கேயோ பார்த்து உள்ளோமே என தெரிந்து, அப்பெண்ணை பின்தொடர்ந்து சென்றார்.
அதிர்ச்சி
அருகில் சென்று பார்த்தபோது, தன் மனைவி மல்லிகே என்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக மடிகேரி போலீசுக்கு தகவல் அளித்தார். அங்கு வந்த போலீசார், மல்லிகேயை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.
அவரிடம் விசாரித்த போது, தனது கள்ளக்காதலனுடன் விராஜ்பேட்டையில் உள்ள ஷெட்டிகெரேயில் ஐந்து ஆண்டுகளாக வசித்து வருவதாக தெரிவித்தார். அவரை, எலும்புக்கூடு கிடைத்ததாக வழக்கு பதிவான பெட்டதபுரா போலீசில் ஒப்படைத்தனர்.
இதன்பின், மைசூரு ஐந்தாவது கூடுதல் மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். விசாரித்த நீதிமன்றம், வழக்கை விசாரித்த பெட்டதபுரா போலீஸ் நிலைய அதிகாரிகளும், எஸ்.பி.,யும் ஆஜராகுமாறு உத்தரவிட்டது.
இதையடுத்து, எஸ்.பி., விஷ்ணுவர்த்தன், பெட்டதபுரா போலீசார் நேற்று ஆஜராகினர். 'இவ்வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தி, அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். மேலும் மல்லிகேவுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும்' என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. மல்லிகே, மாவட்ட பெண்கள் பாதுகாப்பு மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இந்த சம்பவத்தால், 'ஒரு தவறும் செய்யாமல், நான்கரை ஆண்டுகள் சிறையில் இருந்தாரே' என, சுரேஷ் குடும்பத்தினர் ஆதங்கப்பட்டனர்.

