/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
வேலைக்கு சென்றவர் மாயம் கால்வாயில் சடலமாக மீட்பு
/
வேலைக்கு சென்றவர் மாயம் கால்வாயில் சடலமாக மீட்பு
ADDED : ஆக 26, 2025 03:08 AM

தொட்டபல்லாபூர்: வேலைக்காக சென்ற நபர், ஐந்து நாட்களுக்கு பின், கால்வாயில் அழுகிய நிலையில் பிணமாக கிடந்தார். கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று போலீசில் மகன் புகார் செய்து உள்ளார்.
தொட்டபல்லாபூரின் கனியஞ்சாவ்கள்ளியை சேர்ந்தவர் முனிகிருஷ்ணா, 40. கடந்த 20ம் தேதி தனது நண்பர்களுடன் வேலைக்கு சென்றார். அன்று மாலையில் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் அவரை தேடியும் கிடைக்காததால், தொட்டபல்லாபூர் ரூரல் போலீசில் குடும்பத்தினர் புகார் செய்தனர்.
இந்நிலையில், திப்பகனஹள்ளி ஏரி கால்வாயில், ஆண் சடலம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு வந்த போலீசார், பார்த்தபோது, இறந்து கிடப்பது முனிகிருஷ்ணா என்பதை உறுதி செய்தனர்.
இது குறித்து முனிகிருஷ்ணா மகன் நிக் ஷித் கூறியதாவது:
என் தந்தை கடந்த 20ம் தேதி அவரது நண்பர்கள் முனிராஜு, வெங்கடேஷ் ஆகியோருடன் பணிக்கு சென்றார். இரவு ஆகியும் தந்தை வராததால், முனிராஜுவிடம் கேட்டேன். அதற்கு அவர், 'உன் தந்தை குஞ்சூர் அருகில் உள்ள ஹோட்டலில் தங்கி உள்ளார்' என்றார்.
நாங்களும் அந்த ஹோட்டல் சுற்றுப்பகுதிகளில் தேடிப்பார்த்தோம்; கிடைக்கவில்லை. இந்நிலையில் என் தந்தையின் உடல் கால்வாயில் கண்டெடுக்கப்பட்டு உள்ளது. அவருக்கு நன்றாக நீச்சல் தெரியும். ஏரியில் தள்ளி விட்டாலும், நீந்தி கரைக்கு வந்துவிடுவார்.
என் தந்தையின் மரணத்தில் சந்தேகம் உள்ளது. போலீசார், தந்தையின் நண்பர்களிடம் தீவிரமாக விசாரிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
நிக் ஷித் அளித்த புகாரின் அடிப்படையில், போலீசார் விசாரிக்கின்றனர்.