அனைத்து தரப்பினருக்கும் ஏற்ற இடம் மங்களூரு படப்பாடி கடற்கரை
அனைத்து தரப்பினருக்கும் ஏற்ற இடம் மங்களூரு படப்பாடி கடற்கரை
UPDATED : நவ 26, 2026 12:00 AM
ADDED : நவ 25, 2026 07:32 PM

- நமது நிருபர் -
கர்நாடகா - கேரளா மாநில எல்லைக்கு மிக அருகில், மங்களூரின் தெற்கு பகுதியில் படப்பாடி கடற்கரை உள்ளது. இது, அரபிக்கடலும், நேத்ராவதி - குருபுரா நதிகளின் முகத்துவாரமும் சங்கமிக்கும் அழகிய இடம். கடலுடன், நதி இணைவதை காண்பது கண்கொள்ளா காட்சியாக இருக்கும்.
மங்களூரில் உள்ள பனம்பூர், தண்ணீர்பாவி, சோமேஸ்வர் உள்ளிட்ட கடற்கரைகளை ஒப்பிடும்போது, இங்கு கூட்டம் குறைவாக இருக்கும்.
அமைதியாக அமர்ந்து கடல் அலை சத்தத்தை கேட்க விரும்புவோருக்கு ஏற்ற இடமாக உள்ளது.
அனைத்து தரப்பினருக்கும் ஏற்ற இந்த மங்களூரு படப்பாடி கடற்கரையில், கடல் அரிப்பை தடுக்க, இங்கு நீண்ட கடல் சுவர் அமைக்கப்பட்டுள்ளது.
இதன் மீது நின்று சூரிய அஸ்தமனத்தை பார்ப்பது மனதிற்கு நிறைவு தரும்.
கடலும், நதியும் சங்கமிக்கும் இடத்தில் உள்ள நீர்தேக்க பகுதி சதுப்பு நில காட்டிற்குள் அமைந்துள்ளது. இந்த காடுகள் வழியாக படகு சவாரி செய்ய சுற்றுலா பயணியர் அனுமதிக்கப்படுகின்றனர்.
ஒரு நபருக்கு 100 ரூபாய் முதல், 200 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. நீண்ட மூங்கில் கம்புகளால் தள்ளப்படும் சிறிய ரக நாட்டு படகுகளில் சவாரிக்கு அழைத்து செல்கின்றனர்.
சதுப்பு நில காடுகளில் இயற்கையான பச்சை குகை போன்ற வழிகளுக்குள் செல்வது புதிய அனுபவமாக இருக்கும். புகைப்பட கலைஞர்களின் சொர்க்கமாகவும் விளங்குகிறது.
முகத்துவார பகுதியில் நாரைகள், பருந்துகள், கடல் காகங்கள், பல்வேறு வகையான புலம் பெயர்ந்த பறவைகளை கண்டு ரசிக்கலாம்.
இப்பகுதியில், கடல் மிகவும் ஆழமானது. அதிக வேகமான அலைகள் மற்றும் பாறைகள் அதிகம் நிறைந்த பகுதி என்பதால், சுற்றுலா பயணியர் குளிக்க அனுமதி இல்லை.
வணிகமயமாக்கப்படாத கடற்கரை என்பதால் கடைகள், உணவகங்கள் இருக்காது. இங்கு செல்வோர் குடிநீர், தின்பண்டங்களை எடுத்து செல்வது நல்லது. அதிகாலையில் சென்றால் மீனவர்கள் தங்கள் பாரம்பரிய மர படகுகள் மூலம் கடலுக்குள் மீன்பிடிக்க செல்வதையும் பார்க்கலாம்.
