ஜூன் 4ல் மாம்பழ மேளா லால்பாக் பூங்காவில் துவக்கம்
ஜூன் 4ல் மாம்பழ மேளா லால்பாக் பூங்காவில் துவக்கம்
ADDED : ஜூன் 02, 2026 01:20 AM

பெங்களூரு: லால்பாக் பூங்காவில், ஜூன் 4 முதல் 30ம் தேதி வரை, மாம்பழ மேளா நடக்கவுள்ளது. இதற்காக 2--00 கடைகள் திறக்கப்பட்டுள்ளன.
இது குறித்து, மாம்பழ மேம்பாட்டு ஆணைய நிர்வாக இயக்குனர் வேதமூர்த்தி கூறியதாவது:
பெங்களூரின் லால்பாக் பூங்காவில், ஜூன் 4ம் தேதி முதல், 30ம் தேதி வரை மாம்பழம், பலாப்பழம் மேளா நடக்கவுள்ளது. மக்களுக்கு ரசாயனம் இல்லாத, தரமான பழங்கள் கிடைக்கவும், விவசாயிகளுக்கு நியாயமான விலை கிடைக்கும் வகையில், மேளா ஏற்பாடு செய்யப்படுகிறது.
பழங்களின் விற்பனைக்காக, 200 கடைகள் திறக்கப்பட்டுள்ளன. இவற்றில் 185 கடைகளில் மாம்பழங்களும், 15 கடைகளில் பலாப்பழமும் விற்கப்படும். கோலார், சிக்கபல்லாபூர், தார்வாட், கொப்பால், ராம்நகர், துமகூரு உட்பட பல்வேறு மாவட்டங்களின் விவசாயிகள், மேளாவில் பங்கேற்று தாங்கள் விளைவித்த பழங்களை விற்பர்.
மல்கோவா, ரசப்பூரி, அல்போன்சா, கேசர், மல்லிகா, தோத்தாப்புரி, ஆலான், இமாம் பசந்த், செந்துாரா, சர்க்கரைக்குட்டி, மியாபாகி என பல ரகங்களில் மாம்பழங்கள் கிடைக்கும்.
மேளாவுக்கு வரும் பொதுமக்கள், நுழைவு கட்டணம் செலுத்த வேண்டும். பெரியவர்களுக்கு 50 ரூபாய், சிறார்களுக்கு 30 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மாம்பழ மேம்பாட்டு ஆணையம் அல்லது தோட்டக்கலைத்துறை, மாம்பழத்துக்கு விலை நிர்ணயிக்கவில்லை. விவசாயிகள் தள்ளுபடி விலையில், மக்களுக்கு பழங்கள் விற்கலாம். மேளாவில் தினமும் 10 டன் மாம்பழங்கள் விற்கப்படலாம் என, எதிர்பார்க்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
