/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பயணம் சுகமாக அமைய வழி காட்டும் 'மனோன்மனேஸ்வரர்'
/
பயணம் சுகமாக அமைய வழி காட்டும் 'மனோன்மனேஸ்வரர்'
ADDED : ஆக 11, 2025 10:00 PM
மைசூரு மாவட்டம், கோவில்களுக்கு பிரசித்தி பெற்றதாகும். இத்தகைய கோவில்களில் மனோன்மனேஸ்வரர் கோவிலும் ஒன்றாகும். இக்கோவில், 400 ஆண்டுகள் பழமையானது.
மைசூரு - ஊட்டி தேசிய நெடுஞ்சாலையில், மன்டகள்ளி கிராமத்தில் மனோன்மனேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில், ஜெய சாமராஜேந்திர உடையாரால் கட்டப்பட்டது. தற் போது ஹிந்து அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. கோவில் சிதிலமடைந்திருந்த போது, சீரமைக்கும்படி சுற்றுப்புற கிராமத்தினரும், பொது மக்களும் மாநில அரசிடம் பலமுறை வேண்டுகோள் விடுத்தும் பயன் இல்லை.
இதனால் வெறுப்படைந்த அவர்கள், தாங்களே ஒன்று சேர்ந்து பணம் செலவிட்டு, கோவிலை மேம்படுத்தினர்.
இவர்களின் முயற்சியால் கோவில் பொலிவடைந்தது. சில மாதங்களுக்கு முன்புதான், மனோன்மனேஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகத்தையும் நடத்தினர். அன்றைய தினம் ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
மூலஸ்தானத்தில் மனோன்மனேஸ்வரர், மனோன்மனேஸ்வரி குடிகொண்டு, பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர்.
தொழிலில் நஷ்டமடைந்தோர், திருமண தடை உள்ளவர்கள், குழந்தை இல்லாத தம்பதியர் கோவிலுக்கு வந்து பிரார்த்தனை செய்தால், தொழில் முன்னேறும்; திருமணம் கூடும்; குழந்தை வரம் கிடைக்கும் என்பது ஐதீகம். கோவிலின் மகத்துவத்தை அறிந்து கொண்டு, ஏராளமான பக்தர் கள் வருகின்றனர். வெளி மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வந்து தரிசனம் செ ய்கின்றனர்.
மைசூரு - ஊட்டி தே சிய நெடுஞ்சாலை வழியாக பயணிக்கும் பலரும், கோவிலுக்கு வந்து மனோன்மனேஸ்வரரை வணங்கிய பின், பயணத்தை தொடர்கின்றனர்.
இதனால், பயணம் சுகமாக அமையும் என்பது, பக்தர்களின் நம்பிக்கையாகும். இக்கோவில் அருகிலேயே சாமுண்டி மலையின், சாமுண்டீஸ்வரி கோவில் உள்ளது.
- நமது நிருபர் -