காதல் திருமணம் செய்த பெண் கிணற்றில் சடலமாக மீட்பு
காதல் திருமணம் செய்த பெண் கிணற்றில் சடலமாக மீட்பு
ADDED : ஆக 18, 2026 02:44 AM
சித்ரதுர்கா: காதல் திருமணம் செய்து கொண்ட இளம் பெண், மர்மமான முறையில் கிணற்றில் இறந்து கிடந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
சித்ரதுர்கா மாவட்டம், செல்லகெரே தாலுகாவின் சிக்க உள்ளார்த்தி கிராமத்தில் வசித்தவர் சுமித்ரா, 21. இவரும், இதே கிராமத்தில் வசிக்கும் கஜேந்திரா, 26, என்பவரும் காதலித்தனர். ஆரம்பத்தில் இவர்களின் திருமணத்துக்கு, சுமித்ராவின் குடும்பத்தினர் சம்மதிக்கவில்லை. அதன்பின் மகளின் பிடிவாதத்தால் சம்மதித்தனர்.
இருவருக்கும் ஆகஸ்ட் 14ம் தேதி கோவிலில் திருமணம் நடந்தது. அன்று மதியம் கழிப்பறைக்கு சென்று வருவதாக கூறி சென்ற சுமித்ரா, நீண்ட நேரமாக வீடு திரும்பவில்லை.
கலக்கமடைந்த குடும்பத்தினர் தேட துவங்கினர். எங்கும் காணப்படாததால், தளகு போலீஸ் புகார் அளித்தனர். போலீசாரும் கிராமத்துக்கு வந்து தேட துவங்கினர்.
மூன்று நாட்களுக்கு பின், சிக்க உள்ளார்த்தி அருகில் உள்ள மஹாதேவபுரா கிராமத்தின் பாழடைந்த கிணற்றில் சுமித்ராவின் உடல் நேற்று காலை கண்டுபிடிக்கப்பட்டது.
இவரை யாரோ கொலை செய்து, கிணற்றில் வீசியிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.
தீயணைப்பு படையினர் உதவியுடன் உடலை வெளியே எடுத்த போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமணமான மூன்றே நாளில், இளம்பெண் மர்மமான முறையில் இறந்து கிடந்ததால், கிராமத்தில் பதற்றமான சூழல் நிலவுகிறது.
