/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பெண்களை பாதுகாக்கும் ' மேரி சஹேலி' படை
/
பெண்களை பாதுகாக்கும் ' மேரி சஹேலி' படை
ADDED : செப் 29, 2025 05:25 AM

ரயிலில் தனியாக பயணிக்கும் பெண்களின் பாதுகாப்புக்காக, ரயில்வே துறை செயல்படுத்திய, 'மேரி சஹேலி' (என் தோழி) திட்டம் அமோக வெற்றி அடைந்துள்ளது. பெண்கள் பயமின்றி பயணிக்கின்றனர்.
தவிர்க்க முடியாத நேரத்தில், இரவில் ரயிலில் தனியாக பயணிக்கும் பெண்களுக்கு பயம், ஆதங்கம் இருப்பது சகஜம். இப்போது அந்த பயம் தேவையில்லை. இரவில் பயணிக்கும் பெண்களின் பாதுகாப்புக்காக, மத்திய ரயில்வே துறை 2020ல், 'மேரி சஹேலி' என்ற திட்டத்தை செயல்படுத்தியது. இக்குழுவில் உள்ள மகளிர் போலீசார், ரயில்களில் தனியாக செல்லும் பெண் பயணியருக்கு, தோழியை போன்று தைரியமூட்டுகின்றனர். இக்குழுவினர் பெண் பயணியரின் மனதை கவர்ந்துள்ளனர்.
இது தொடர்பாக, தென் மேற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:
'மேரி சஹேலி' திட்டம், 2020 நவம்பரில் துவக்கப்பட்டது. இதற்கு பெண்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. தென்மேற்கு ரயில்வே மண்டலத்தில், ரயில்வே பாதுகாப்பு படையின் 25 மகளிர் போலீசார் அடங்கிய, 10 'மேரி சஹேலி' குழுக்கள் செயல்படுகின்றன.
நடப்பாண்டு ஜனவரி முதல் இதுவரை, 4,869 ரயில்களில் தனியாக பயணித்த 2,08,869 பெண்களின் உதவிக்கு சென்றனர். ரயில்களில் பயணிக்கும் பெண்கள், அவசர நேரத்தில் 139 ஹெல்ப் லைனில் தொடர்பு கொண்டு, உதவி பெறலாம்.
இக்குழுவினர், தனியாக பயணிக்கும் பெண்களை தைரியப்படுத்துவர். பயணத்தின் போது, மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்துவர். பெண் பயணியர் செல்ல வேண்டிய இடத்தை பாதுகாப்பாக சென்றடைந்தனரா என்பதை, 'மேரி சஹேலி'குழுவினர் உறுதி செய்து கொள்வர்.
ஒரு பெண் பெங்களூரில் இருந்து, பயணத்தை துவக்கி, பெலகாவியில் இறங்க வேண்டியிருந்தால், அவர்கள் அரசிகெரே, தாவணகெரே, ஹூப்பள்ளி ரயில் நிலையங்களில் நிர்ணயித்த இருக்கையில் உள்ளார்களா என, இக்குழுவினர் கண்காணிப்பர். தனியாக பயணிக்க டிக்கெட் வாங்கிய பெண்களின் பட்டியல் தயாரித்து, ரயில்வே பாதுகாப்பு படை மற்றும் 'மேரி சஹேலி' குழுவினரிடம் அளிக்கப்படுகிறது. குழுவினர் பெண் பயணியருக்கு தெரியாமல் கண்காணிப்பர். அவர்கள் செல்ல வேண்டிய இடத்தை அடையும் வரை, இந்த கண்காணிப்பு இருக்கும்.
அதேபோன்று, மகளிர் ரயில்வே பாதுகாப்பு படையினர், ரயில்களில் மகளிர் கோச்களுக்கு சென்று, பயண அனுபவத்தை கேட்பர். இவர்கள் ஏதாவது பிரச்னை இருந்தால் சரி செய்வர். பெண்கள் பயமின்றி பயணிப்பது, எங்களின் குறிக்கோள்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- நமது நிருபர் -