வெப்பநிலை அதிகரிப்பதால் நோய் பரவுகிறது மருத்துவ வல்லுநர்கள் எச்சரிக்கை
வெப்பநிலை அதிகரிப்பதால் நோய் பரவுகிறது மருத்துவ வல்லுநர்கள் எச்சரிக்கை
ADDED : ஏப் 08, 2026 04:24 AM
பெங்களூரு: 'பெங்களூரில் வெப்பத்தின் தாக்கம், நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதனால், மக்களின் உடல் நிலை பாதிக்கிறது. காய்ச்சல், சளி உட்பட, பல விதமான நோய்கள் தாக்குகின்றன. சிறார்கள், மூத்த குடிமக்களின் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை' என, மருத்துவ வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.
இதுகுறித்து, கே.சி.ஜெனரல் மருத்துவமனை டாக்டர்கள் கூறியதாவது:
கடந்த ஒரு வாரமாக, பெங்களூரில் வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கிறது. இதன் விளைவாக காய்ச்சல், சளி மற்றும் உடல் வலியால் அவதிப்படுவோரின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. பல்வேறு வைரஸ் பாதிப்பால், மக்களின் ஆரோக்கியம் கெடுகிறது. நகரின் முக்கியமான அரசு மருத்துவமனை, கிளினிக்குகளுக்கு சிகிச்சைக்காக வரும் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. நோய் அறிகுறிகள் ஒருவருக்கு ஒருவர் மாறுபடுகின்றன. சிறார்கள், மூத்த குடிமக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதால், அவர்களை நோய் தொற்று விரைவில் பற்றுகிறது.
வயிற்று வலி, வாந்தி, வயிற்று போக்கு, நியோனியாவாலும் பாதிப்படைகின்றனர். கடந்தாண்டுடன் ஒப்பிட்டால், வெப்பத்தால் ஏற்படும் நோய் பாதிப்பு, இம்முறை, 20 சதவீதம் அதிகரித்துள்ளது. வெப்பத்தின் தாக்கத்தால் நோய் எதிர்ப்பு சக்தி குறையும். தலை சுற்றுதல், கண் சோர்வு, மூச்சு திணறல், இருதய பிரச்னை என, பல்வேறு நோய்கள் தாக்கும் அபாயம் உள்ளது.
நோயை அலட்சியப்படுத்த கூடாது. வெப்பம் அதிகமாக இருக்கும் போது, வெளியே செல்வதை தவிர்ப்பது நல்லது. தினமும் மூன்று, நான்கு லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். ஓ.ஆர்.எஸ்., இளநீர் அருந்த வேண்டும். தாகம் ஏற்படும் வரை காத்திருக்க கூடாது.
பாதி வெந்த, மீண்டும், மீண்டும் சூடுபடுத்திய உணவை சாப்பிடக்கூடாது. வெளியே உணவு சாப்பிடும் முன், அதன் சுகாதாரத்தை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். ஹோட்டல்களுக்கு செல்லும் போது, வெந்நீர் அருந்துவது நல்லது. நோய் அறிகுறிகள் தென்பட்டால், உடனடியாக டாக்டரை அணுகவும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
