/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
மாதவிடாய் விடுமுறை திட்டம் துவக்கம்
/
மாதவிடாய் விடுமுறை திட்டம் துவக்கம்
ADDED : நவ 13, 2025 04:13 AM
பெங்களூரு: மாநிலத்தில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில், பணியாற்றும் பெண்களுக்கு, மாதவிடாயின்போது, ஊதியத்துடன் ஒரு நாள் விடுமுறை அளிக்கும் திட்டம் அதிகாரப்பூர்வமாக துவக்கப்பட்டுள்ளது.
கர்நாடக அரசு நேற்று வெளியிட்ட அறிக்கை:
கர்நாடக தொழிற்சாலைகள் சட்டம் - 1948, கர்நாடக கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் சட்டம் - 1961, தோட்ட தொழிலாளர்கள் சட்டம் - 1951, பீடி, சிகரெட் தொழிலாளர்கள் சட்டம் - 1966, மோட்டார் போக்குவரத்து தொழிலாளர்கள் சட்டம் - 1961ன் கீழ், பதிவு செய்யப்பட்ட அனைத்து தொழிற்சாலைகள், நிறுவனங்களில் பணியாற்றும் பெண் ஊழியர்களின் பணித்திறன் மற்றும் மனோதிடத்தை அதிகரிக்க ஆலோசிக்கப்பட்டது.
இது தொடர்பாக ஆய்வு செய்ய வல்லுநர் கமிட்டி அமைக்கப்பட்டது. இந்த கமிட்டி விரிவாக ஆய்வு செய்து, பணியாற்றும் பெண்களுக்கு, மாதவிடாயின்போது, ஊதியத்துடன் ஒரு நாள் விடுமுறை அளிக்கும்படி பரிந்துரை செய்தது.
பொது மக்கள், தொழிலாளர்கள் சங்கங்கள், அரசு ஊழியர்கள் கூட்டமைப்பு உட்பட, பலரிடம் கருத்து கேட்கப்பட்டது. பெண்களுக்கு மாதவிடாய் விடுமுறை அளிக்கும் திட்டத்துக்கு ஆதரவாக, அதிகமான கருத்துகள் கிடைத்தன.
எனவே திட்டம் அதிகாரப்பூர்வமாக நேற்று முதல் செயல்படுத்தப்படுகிறது. அனைத்து தொழிற்சாலைகள், வர்த்தகம் உட்பட, அனைத்து நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் பணியாற்றும் 18 முதல் 52 வயது வரையிலான நிரந்தர, ஒப்பந்த பெண் ஊழியர்களுக்கு மாதவிடாய் நேரத்தில், ஒருநாள் ஊதியத்துடன் விடுமுறை அளிக்க வேண்டும்.
இது அவர்களின் ஆரோக்கியத்துக்கும், பணித்திறனை மேம்படுத்தவும் உதவும். பெண் ஊழியர்கள் அந்தந்த மாதம் மாதவிடாய் நேரத்தில் மட்டுமே, விடுமுறை எடுத்துக் கொள்ள வேண்டும். அந்த மாதம் எடுக்காமல், அடுத்த மாதம் இரண்டு நாட்களாக எடுத்துக் கொள்ள அனுமதி இல்லை.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

