மெட்ரோ இளஞ்சிவப்பு தடத்தில் ஆக., 15க்கு முன் பயணியர் ரயில்
மெட்ரோ இளஞ்சிவப்பு தடத்தில் ஆக., 15க்கு முன் பயணியர் ரயில்
ADDED : மே 15, 2026 03:35 AM
பெங்களூரு: இளஞ்சிவப்பு வழித்தடத்தில் காளேனஅக்ரஹாரா - தாவரகெரே இடையே, உயர்மட்டப் பாதையில், ஆகஸ்ட் 15ம் தேதிக்கு முன் பயணியர் ரயிலை இயக்குவதற்கு அனுமதி கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
பெங்களூரு நகரில் தற்போது மாதவரா - சில்க் இன்ஸ்டிடியூட் இடையிலான, பசுமை வழித்தடம்; செல்லகட்டா - ஒயிட்பீல்ட் இடையிலான ஊதா வழித்தடம்; ஆர்.வி., ரோடு - பொம்மசந்திரா இடையிலான மஞ்சள் வழித்தடமும் முழுமையாக பயன்பாட்டில் உள்ளன.
இறுதி கட்டம் காளேன அக்ரஹாரா முதல் நாகவாரா வரையுள்ள, 21.26 கி.மீ., துாரத்திற்கு இளஞ்சிவப்பு வழித்தடம் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த வழித்தடத்தின், 7.50 கி.மீ., துாரமுள்ள மேம்பாலப் பாதைப் பணி; 13.76 கி.மீ., துாரமுள்ள சுரங்கப் பாதை அமைக்கும் பணிகளும் முடிந்துவிட்டன.
சுரங்கப்பாதையில் தண்டவாளங்கள் அமைக்கும் பணிகளும் மின்மயமாக்கல் பணிகளும் இறுதிக்கட்டத்தில் உள்ளன.
காளேனஅக்ரஹாரா முதல் தாவரகெரே வரையிலான, 7.5 கி.மீ., உயர்மட்டப் பாதையில் சோதனை ஓட்டங்கள் கடந்த மாதம் 28ல் துவங்கின. ரயில்வே அமைச்சகத்தின், ஆர்.டி.எஸ்.ஓ., எனப்படும் ஆய்வு வடிவமைப்புக்குழுவினர் இந்தச் சோதனைகளை நடத்தினர்.
இந்த சோதனை ஓட்டம், மே 9ல் முடிவடைந்தன. இது தொடர்பான அறிக்கையை, மூன்று வாரங்களுக்குள் சமர்ப்பிக்க குழுவினர் திட்டமிட்டுள்ளனர். அதன் பின், இந்த வழித்தடத்தில் பயணியர் ரயில்களை இயக்குவதற்கு அனுமதியை ரயில்வே வாரியம் வழங்கும்.
எப்போது? ஆகஸ்ட் 15ம் தேதிக்கு முன், இளஞ்சிவப்பு வழித்தடத்தில் ரயில்களை இயக்க அனுமதி கிடைக்கும் என்று, 'நம்ம மெட்ரோ' வட்டாரங்கள் நம்பிக்கை தெரிவித்தன.
கடந்த, 2025 செப்டம்பர், 2026 மார்ச், மே என, பல இலக்குகளை தவற விட்ட நிலையில், இளஞ்சிவப்பு வழித்தடத்தில் ஜூனில் பயணியர் ரயில் இயக்கப்படுமென்ற இலக்கும் தகர்க்கப்பட்டுள்ளது.
ரயில் நிலையப் பணிகள், பணிமனைப் பணிகள் இன்னும் முழுமையாக நிறைவடையவில்லை. பணியாளர் நியமனமும் நிறைவடையவில்லை.
இதற்கிடையில், இந்த வழித்தடத்தில் இயக்குவதற்கு ஐந்து ரயில்கள் தயாராக உள்ளன. இவை, ஓட்டுநர் இல்லாமல் இயங்கக்கூடியவை.
டிசம்பர் மாதம் முழு வழித்தடமும் வணிக சேவைக்காக திறக்கப்படும் நேரத்தில், இந்த வழித்தடத்தில் 16 ரயில்களை இயக்க, பி.எம்.ஆர்.சி.எல்., எனும் பெங்களூரு மெட்ரோ ரயில் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
