/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
மெட்ரோ ரயில் 3ம் கட்ட திட்டம் 44 கி.மீ.,க்கு 'டபுள் டெக்கர்' பாதை
/
மெட்ரோ ரயில் 3ம் கட்ட திட்டம் 44 கி.மீ.,க்கு 'டபுள் டெக்கர்' பாதை
மெட்ரோ ரயில் 3ம் கட்ட திட்டம் 44 கி.மீ.,க்கு 'டபுள் டெக்கர்' பாதை
மெட்ரோ ரயில் 3ம் கட்ட திட்டம் 44 கி.மீ.,க்கு 'டபுள் டெக்கர்' பாதை
ADDED : மே 19, 2025 11:45 PM
பெங்களூரு : மெட்ரோ ரயில் மூன்றாம் கட்ட திட்டத்தில், 44 கி.மீ.,க்கு, 'டபுள் டெக்கர்' பாதை அமைக்க, பெங்களூரு மெட்ரோ ரயில் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதற்கு தேவையான 8,916 கோடி ரூபாயை, மாநில அரசிடம் கேட்க தயாராகிறது.
பெங்களூரு மெட்ரோ அதிகாரிகள் கூறியதாவது:
ஏற்கனவே மெட்ரோ ரயில் திட்டத்தின், இரண்டாம் கட்டத்தில் ஆர்.வி.சாலை - பொம்மசந்திராவை இணைக்கும், மஞ்சள் மெட்ரோ பாதையில், சென்ட்ரல் சில்க் போர்டில் இருந்து, ராகிகுட்டா வரை 3 கி.மீ., தொலைவில் டபுள் டெக்கர் பாதை அமைக்கப்படுகிறது.
இது பெங்களூரின் முதல் டபுள் டெக்கர் பாதையாகும். இதற்காக 450 கோடி ரூபாய் செலவிடப்பட்டது.
இதுபோன்று, மூன்றாம் கட்டத்திலும் டபுள் டெக்கர் பாதை அமைக்கப்படும். மெட்ரோ மூன்றாம் கட்டத்தில் ஜெ.பி., நகர் 4வது ஸ்டேஜ் - கெம்பாபுரா இடையே 32.15 கி.மீ., மற்றும் ஹொசஹள்ளி - கடபகெரே இடையே 12.50 கி.மீ., தொலைவில் 15,611 கோடி ரூபாய் செலவிலான திட்டத்துக்கு, 2024 ஆகஸ்டில் மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன. திட்ட அறிக்கையை மத்திய அரசிடம் தாக்கல் செய்த போது, டபுள் டெக்கர் அமைப்பது குறித்து அறிக்கையில் குறிப்பிடவில்லை. அதன்பின் மாநில அரசு, டபுள் டெக்கர் அமைக்க திட்டம் வகுத்தது. இத்திட்டம் செயல்படுத்தப்பட்டால் மேம்பாலம், அதன் மீது மெட்ரோ பாதை அமையும்.
திட்டத்தின் சாதக, பாதகங்கள் குறித்து ஆய்வு செய்யும் பொறுப்பை, ஹைதராபாத்தை சேர்ந்த 'ஆர்வி அசோசியேட்ஸ் ஆர்க்கிடெக்ட் இன்ஜினியர்ஸ் மற்றும் கன்சல்டன்ட் பிரைவேட் லிமிடெட்' நிறுவனத்திடம் ஒப்படைத்தது; நிறுவனமும் ஆய்வு செய்து அறிக்கை அளித்தது. சாதக, பாதகங்களை பரிசீலித்த பெங்களூரு மெட்ரோ நிறுவனம், டபுள் டெக்கர் அமைக்க ஒப்புதல் அளித்தது.
சுமனஹள்ளி கிராசில் இருந்து கெம்பாபுரா வரை; ஜெ.பி., நகரில் இருந்து நாகரபாவி நிலையம் வரை டபுள் டெக்கர் அமைக்க ஆய்வு நடத்தப்பட்டது. சிவில் பணிகளுக்கு 6,368 கோடி ரூபாய்; நிலம் கையகப்படுத்த 2,548 கோடி ரூபாய் என, 8,916 கோடி ரூபாய் தேவைப்படுகிறது. இத்தொகையை வழங்கும்படி, மாநில அரசிடம் வேண்டுகோள் விடுக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.