UPDATED : அக் 14, 2026 12:00 AM
ADDED : அக் 13, 2026 11:36 PM
பெங்களூரு: மெட்ரோ ரயில் பாதை அமைக்கும் பணிகளுக்காக பெங்களூரு மெட்ரோ ரயில் நிறுவனம் ஆயிரக்கணக்கான மரங்களை வெட்டியது. அவற்றுக்கு பதிலாக மரக்கன்றுகள் நடுவதாக கூறிய வாக்குறுதியை நிறைவேற்றவில்லை.
பெங்களூரில் முதல் மற்றும் இரண்டாவது கட்ட மெட்ரோ பாதை பணிகளுக்காக, 6,169 மரங்கள் வெட்டப்பட்டன. மரங்களை வெட்டுவதற்கு முன், ஒரு மரத்துக்கு பதிலாக, 10 மரக்கன்றுகள் நடுவதாக அதிகாரிகள் உறுதி அளித்திருந்தனர். மரக்கன்றுகள் நடுவது தொடர்பாக, வனத்துறையுடன் மெட்ரோ நிறுவனம் ஒப்பந்தம் செய்திருந்தது.
வனத்துறை விதிமுறைகளின்படி வெட்டப்பட்ட அல்லது இடம் மாற்றப்பட்ட மரங்களுக்கு பதிலாக பத்து மரக்கன்றுகளை நட்டு மூன்று ஆண்டுகளுக்கு பராமரிப்பது கட்டாயம்.
இதன்படி பார்த்தால், மெட்ரோ நிறுவனம், வெட்டிய மரங்களுக்கு பதிலாக, 61 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டிருக்க வேண்டும். ஆனால் மரங்களை நட்டது, பராமரித்ததற்கான எந்த ஆவணங்களும் இல்லை. மெட்ரோ நிறுவனம் மரக்கன்றுகளை நடவில்லை என்பது, இந்திய கணக்கு தணிக்கையாளரின் ஆய்வில் தெரிய வந்துள்ளது.
முதலாவது, இரண்டாவது கட்ட மெட்ரோ பணிகளுக்காக, ஆயிரக்கணக்கான மரங்களை வெட்டிய, மெட்ரோ நிறுவனம் அதற்கு ஏற்ப, மரங்களை நட்டுள்ளதா என்பது குறித்து விசரணை நடத்த வேண்டும் என, சுற்றுச்சூழல் வல்லுநர்கள் வலியுறுத்துகின்றனர்.
