ADDED : செப் 24, 2026 12:37 AM
பங்கார்பேட்டை: பங்கார்பேட்டை தாலுகா முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் மதிய உணவு தயாரிக்கும் ஊழியர்கள், தங்களுக்கு நான்கு மாத சம்பளம் வழங்காததை கண்டித்து, தாலுகா பஞ்சாயத்து அலுவலகம் முன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சங்க செயலர் சுஜாதா கூறியதாவது:
ஏழை குடும்பத்தைச் சேர்ந்த நாங்கள், 10 ஆண்டுகளாக சொற்ப சம்பளத்தில் வேலை செய்கிறோம். இருப்பினும், கடந்த நான்கு மாதங்களாக, அரசு சம்பளம் வழங்கவில்லை. இதனால் எங்களுக்கு அன்றாட வாழ்க்கை நடத்துவது மிகக் கடினமாகி விட்டது.
நான்கு மாத நிலுவை சம்பளம் வழங்கப்பட வேண்டும். ஒவ்வொரு மாதமும் பத்தாம் தேதிக்குள் ஊழியர்களின் வங்கி கணக்குகளில் சம்பளம் செலுத்த வேண்டும்.
சமையலறை ஊழியர்களுக்கு சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் தேவை. பழைய சமையல் பாத்திரங்கள் மாற்றப்பட்டு, புதிய பாத்திரங்களை வழங்க வேண்டும். தினமும் பள்ளிகளுக்கு தானியங்கள் உரிய நேரத்தில் வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
போராட்டத்தில், மதிய உணவு தயாரிக்கும் சங்க நிர்வாகிகள், ஊழியர்கள் பலர் பங்கேற்றனர்.
