/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பால் வாகனம் விபத்து 7 மாணவர்கள் காயம்
/
பால் வாகனம் விபத்து 7 மாணவர்கள் காயம்
ADDED : ஆக 07, 2025 11:02 PM
மைசூரு: நீண்ட நேரம் காத்திருந்தும் பஸ் வராததால், பால் வாகனத்தில் மாணவர்கள் பள்ளிக்குச் சென்றனர். பால் வேன் விபத்துக்குள்ளானதில் மாணவர்கள் காயமடைந்தனர்.
மைசூரு மாவட்டம், ஹுன்சூர் தாலுகாவின், சோமனஹள்ளி கிராமத்தில் வசிக்கும் மாணவர்கள், ஹுன்சூரில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் படிக்கின்றனர். தினமும் அரசு பஸ்சில் பள்ளிக்கு சென்று வருவது வழக்கம். நேற்று காலை பஸ் நிலையத்துக்கு வந்தனர். நீண்ட நேரமாக காத்திருந்தும் பஸ் வரவில்லை.
பள்ளிக்கு நேரமாகும் என்பதால், அந்த வழியாக சென்ற பால் வேனில் ஏறிச்சென்றனர். ஹுன்சூர் அருகில் சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்த வேன், பல்டியடித்து சாலையோரம் உருண்டது. அதில் பயணம் செய்த பாலாக்ஷா, வித்யாசரண், அப்பு, புனித் உட்பட, ஏழு மாணவர்கள் காயமடைந்தனர்.
அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெறுகின்றனர். பாலாக்ஷா என்ற மாணவர் பலத்த காயமடைந்துள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இதுகுறித்து, ஹுன்சூர் ஊரக போலீஸ் நிலையத்தில் வழக்குப் பதிவாகியுள்ளது.
'அரசு பஸ் சரியான நேரத்தில் வந்திருந்தால், மாணவர்கள் பால் வாகனத்தில் செல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்காது' என, கிராமத்தினர் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.