வீடுகளுக்கு சிலிண்டர் வினியோகம் பாதிக்காது என அமைச்சர் உறுதி
வீடுகளுக்கு சிலிண்டர் வினியோகம் பாதிக்காது என அமைச்சர் உறுதி
ADDED : மார் 12, 2026 05:54 AM

பெங்களூரு: ''வீடுகளுக்கு காஸ் சிலிண்டர் வினியோகம் செய்வதில் எந்த சிக்கலும் இல்லை,'' என்று, பொது வினியோக துறை அமைச்சர் முனியப்பா கூறினார்.
அமைச்சர் முனியப்பா, தனது துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
பின், அவர் அளித்த பேட்டி;
ஈரான் - இஸ்ரேல் போரால் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து நமக்கு வர வேண்டிய, எரிவாயு பொருட்கள் வராததால் பிரச்னையை எதிர்கொள்கிறோம். மாநிலத்தில் தினமும் 3.50 லட்சம் வீடுகளுக்கு சமையல் காஸ் சிலிண்டர், 50,000 வணிக சிலிண்டர்கள் தேவை உள்ளது.
நம்மிடம் இப்போது கையிருப்பு உள்ளதால் யாரும் கவலைப்பட வேண்டாம். வீடுகளுக்கு காஸ் சிலிண்டர் வினியோகம் செய்வதில் எந்த சிக் கலும் இல்லை. வணிக சிலிண்டர் வினியோகத்தில் சிறிய சிக்கல்கள் உள்ளன.
இந்த நேரத்தில் மக்கள் சிலிண்டரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். இதுபோன்ற கடினமான நேரத்தில் அரசு, எண்ணெய் நிறுவனங்களுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வேண்டும். வாரத்திற்கு ஒரு முறை எண்ணெய் நிறுவனங்களுடன் ஆலோசனை நடத்தும்படி, தலைமை செயலருக்கு கூறி உள்ளோம்.
மக்கள் பீதி அடையாமல், சிலிண்டரை தேவைக்கு பயன்படுத்தினால் எந்த பிரச்னையும் இல்லை. இரண்டு ஆண்டுகளுக்கு தேவையான உணவு பொருட்களை நமது நாடு சேமித்து வைத்து உள்ளது. அரிசி, கோதுமை, சர்க்கரையை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் வலிமையான நாடாக நாம் உள்ளோம். சிலிண்டர்களை கள்ளசந்தையில் விற்பனை செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
