/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
உணவு பதப்படுத்துதல், மதிப்பு கூட்டலுக்கு முன்னுரிமை அளிக்க அமைச்சர் அழைப்பு
/
உணவு பதப்படுத்துதல், மதிப்பு கூட்டலுக்கு முன்னுரிமை அளிக்க அமைச்சர் அழைப்பு
உணவு பதப்படுத்துதல், மதிப்பு கூட்டலுக்கு முன்னுரிமை அளிக்க அமைச்சர் அழைப்பு
உணவு பதப்படுத்துதல், மதிப்பு கூட்டலுக்கு முன்னுரிமை அளிக்க அமைச்சர் அழைப்பு
ADDED : நவ 14, 2025 05:22 AM

பெங்களூரு: ''உணவு பதப்படுத்துதல், மதிப்பு கூட்டலுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்,'' என மத்திய சிறு, குறு, நடுத்தர தொழில்கள் துறை இணை அமைச்சர் ஷோபா தெரிவித்தார்.
பெங்களூரு ஹெப்பால் அருகில் உள்ள ஜி.கே.வி.கே., எனும் காந்தி வேளாண் அறிவியல் மையத்தில் நான்கு நாள் விவசாய மேளா, 'வளமான விவசாயம் - வளர்ந்த இந்தியா' முழக்கத்துடன் நேற்று துவங்கியது. விழாவை மத்திய சிறு, குறு, நடுத்தர தொழில்கள் துறை இணை அமைச்சர் ஷோபா துவக்கி வைத்து பேசியதாவது:
நம் நாடு, 353 மில்லியன் டன் உணவு பயிர்களையும், 355 மில்லியன் டன் காய்கறிகள், பழங்களை உற்பத்தி செய்கிறது. உணவு உற்பத்தியில், இந்தியா தன்னிறைவு அடைந்து, அனைவருக்கும் உணவு வழங்குகிறது. ஆனால், மாநிலங்களில் உணவு பொருட்களுக்கான தேவை ஏற்பட்டு உள்ளது. உணவு பதப்படுத்தும் தொழில் விரிவுபடுத்தப்பட்டு, தேவைப்படும் இடங்களுக்கு வழங்கப்பட வேண்டும்.
மத்திய அரசு வரும் நாட்களில், விவசாய பொருட்களை கொண்டு செல்ல, ரயில்கள், விமானங்களை துவங்க நடவடிக்கை எடுத்து வருகிறது. தொழிலதிபர்கள் புதிய ஆய்வுகளை செய்ய முன்வர வேண்டும். இதற்கு மத்திய, மாநில அரசுகள் ஒத்துழைப்பு அளிக்கும்.
நம் நாட்டில் 50 கோடிக்கும் அதிகமான மக்கள் விவசாயத்தை சார்ந்து உள்ளனர். விவசாய வளர்ச்சிக்காக பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு உள்ளன. கிசான் சம்மான் திட்டம், பயிர் காப்பீடு, தொழில்நுட்பங்களில் புதுமைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு உள்ளது.
உணவு பதப்படுத்துதல், மதிப்பு கூட்டலுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். சுற்றுச்சூழலுக்கு ஏற்ப பயிர்கள் வளர்க்கப்படுகின்றன. வேளாண் பல்கலைக்கழகங்கள், 2,000க்கும் மேற்பட்ட புதிய வகைகளை அறிமுகப்படுத்தியிருப்பது பெருமைக்குரிய விஷயம். சந்தையில் தேவை உள்ள பயிர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
மாநில வேளாண் துறை அமைச்சர் செலுவராயசாமி பேசியதாவது:
வேளாண் பல்கலைக்கழகங்களுக்கு அனைத்து வகையான வசதிகளையும் வழங்க அரசு உறுதி பூண்டுள்ளது. வேளாண் ஆராய்ச்சியாளர்கள், விவசாயிகள் புதிய ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளில் ஈடுபட வேண்டும்.
மாநிலத்தில் தற்போது ஐந்து வேளாண் பல்கலைக்கழகங்கள் உள்ளன. ஒவ்வொரு பல்கலைக்கழகமும் விவசாயிகளுக்கு புதிய ரகங்களை அறிமுகப்படுத்தி வருகின்றன.
அத்துடன் புதிய தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளையும் செய்ய துவங்கி இருப்பது பெருமைக்குரிய விஷயம்.
முன்னர் மழையை நம்பி பயிர்கள் விதைக்கப்பட்டன. இன்று புதிய கண்டுபிடிப்புகளால், விவசாயிகள் பல்வேறு தொழில்நுட்பங்களை பயன்படுத்தி, அனைத்து நேரங்களிலும் விதைப்பதில் ஈடுபட்டு, அதிக மகசூலுடன் வருமானமும் ஈட்டி வருகின்றனர்.
உலகம் முழுதும் நம் நாட்டின் பொருளாதார முன்னேற்றத்துக்கு முக்கிய காரணம், விவசாயிகளின் கடின உழைப்பும், அர்ப்பணிப்புமாகும்.
முன்னர் மற்ற நாடுகளில் இருந்து உணவு பொருட்களை இறக்குமதி செய்தோம்.
நம் விஞ்ஞானிகளின் புதிய ஆராய்ச்சியால், இன்று ஏற்றுமதி செய்து வருகிறோம். நாட்டில் உள்ள 75 வேளாண் பல்கலைக்கழகங்களில், பெங்களூரு வேளாண் பல்கலைக்கழகம், 11வது இடத்தில் உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
கண்காட்சியின் முதல் நாளான நேற்று, 91 சாதனையாளர்களின் வெற்றி கதைகள் அடங்கிய கையேடு வழங்கப்பட்டன.

