/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
16ல் சித்தாபூரில் ஆர்.எஸ்.எஸ்., பேரணி நிபந்தனையுடன் ஐகோர்ட் கிளை அனுமதி
/
16ல் சித்தாபூரில் ஆர்.எஸ்.எஸ்., பேரணி நிபந்தனையுடன் ஐகோர்ட் கிளை அனுமதி
16ல் சித்தாபூரில் ஆர்.எஸ்.எஸ்., பேரணி நிபந்தனையுடன் ஐகோர்ட் கிளை அனுமதி
16ல் சித்தாபூரில் ஆர்.எஸ்.எஸ்., பேரணி நிபந்தனையுடன் ஐகோர்ட் கிளை அனுமதி
ADDED : நவ 14, 2025 05:23 AM
கலபுரகி: சித்தாபூரில் வரும் 16ம் தேதி ஆர்.எஸ்.எஸ்., ஊர்வலம் நடத்த அனுமதி அளித்த கர்நாடக உயர்நீதிமன்ற கலபுரகி கிளை, '300 பேர் மட்டுமே ஊர்வலத்தில் பங்கேற்க வேண்டும்' என்றும் நிபந்தனை விதித்து உள்ளது.
கலபுரகி மாவட்டம், சித்தாபூரில் அக்., 19ல் ஊர்வலம் நடத்த ஆர்.எஸ்.எஸ்., அமைப்பும், பீம் ஆர்மியும் அனுமதி கோரியிருந்தது. இதற்கு தாசில்தார் மறுப்பு தெரிவித்தார். இதை எதிர்த்து கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ஆர்.எஸ்.எஸ்., முறையிட்டது. நீதிமன்றமும், தாசில்தார் உத்தரவை உறுதி செய்தது.
இதையடுத்து உயர் நீதிமன்றத்தின் கலபுரகி கிளையில் மேல்முறையீடு செய்த ஆர்.எஸ்.எஸ்., நவ., 2ல் ஊர்வலம் நடத்த அனுமதி கோரியது. இதை விசாரித்த நீதிமன்றம், நவ., 2ல் ஊர்வலம் நடத்த அனுமதி கேட்ட அமைப்புகளுடன், அக்., 28ல் அமைதி கூட்டம் நடத்தி, அக்., 30ல் அறிக்கை சமர்ப்பிக்கும்படி அரசுக்கு உத்தரவிட்டிருந்தது.
இதையடுத்து, கலெக்டர் பவுசியா தரனும் தலைமையில் அக்., 28ல் அமைதி கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால், அன்றைய கூட்டத்தில், பாரதிய தலித் பேந்தர்ஸ் அமைப்பினரின் கோரிக்கையை, ஆர்.எஸ்.எஸ்., அமைப்பினர் ஏற்கவில்லை. இதனால் இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதால், கூட்டம் பாதியில் நிறுத்தப்பட்டது.
இதையடுத்து, மீண்டும் நவ., 5ல் பெங்களூரில் உள்ள அட்வகேட் ஜெனரல் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடத்த, நீதிமன்றம் உத்தரவிட்டது. அன்று நடந்த கூட்டத்தில் சுமுக முடிவு எடுக்கப்பட்டது.
இது தொடர்பான வழக்கு, நேற்று நீதிபதி கமல் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆர்.எஸ்.எஸ்., தரப்பு வக்கீல் அருண் ஷியாம் வாதிட்டதாவது:
சித்தாபூரில் வரும் 16ம் தேதி ஊர்வலம் நடத்த, தாசில்தார் அனுமதி அளித்துள்ளார். ஆனால், இதில் 600 பேர் பங்கேற்க அனுமதி கேட்டிருந்தோம்.
அவர் 300 பேருக்கு மட்டுமே அனுமதி அளித்து உள்ளார். அதுபோன்று, பேண்டு இசை குழுவினர் 50 பேர் கேட்டிருந்தோம்; அவர் 25 பேருக்கு மட்டுமே அனுமதி அளித்து உள்ளார். எனவே, 600 பேர் பங்கேற்க அனுமதி அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் வாதிட்டார்.
அட்வகேட் ஜெனரல் சசிகிரண் ஷெட்டி வாதிடுகையில், ''நீண்ட ஆலோசனைக்கு பின்னரே, 300 பேர் பங்கேற்க அனுமதிப்பது என்று முடிவு செய்யப்பட்டு உள்ளது. எனவே, இதன் எண்ணிக்கையை அதிகரிக்க கூடாது. அதேவேளையில், பேண்ட் குழுவினரின் எண்ணிக்கையை அதிகரிப்பதில் எங்களுக்கு ஆட்சேபனை இல்லை,'' என்றார்.
இரு தரப்பு வாதங்களையும் ஏற்றுக் கொண்ட நீதிபதி கமல் கூறுகையில், ''நவ., 16ம் தேதி ஆர்.எஸ்.எஸ்., ஊர்வலம் நடத்த அனுமதி அளிக்கப்படுகிறது. இதில், 300 பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும்.
''அதேவேளையில் மனுதாரர் தரப்பில் கேட்டுக் கொண்டதற்கு இணங்க, பேண்ட் குழுவினரின் எண்ணிக்கை 25 முதல் 50 ஆக உயர்த்தி கொள்ளலாம்,'' என, உத்தரவிட்டார்.

