/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் அமைச்சர் ஈஸ்வர் கன்ட்ரே நிபந்தனை
/
விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் அமைச்சர் ஈஸ்வர் கன்ட்ரே நிபந்தனை
விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் அமைச்சர் ஈஸ்வர் கன்ட்ரே நிபந்தனை
விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் அமைச்சர் ஈஸ்வர் கன்ட்ரே நிபந்தனை
ADDED : ஆக 21, 2025 11:02 PM

பெங்களூரு: ''பி.ஓ.பி., சிலைகளை பயன்படுத்த மாட்டோம் என, விநாயகர் சதுர்த்தி கொண்டாடுபவர்களிடம் உறுதிமொழி பெற்ற பின்னரே, அனுமதி வழங்கும்படி உள்ளாட்சி அமைப்புகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது,'' என, மாநில சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஈஸ்வர் கன்ட்ரே தெரிவித்தார்.
பெங்களூரு விகாஸ் சவுதாவில் நேற்று அவர் அளித்த பேட்டி:
விநாயகர் சதுர்த்திக்கு பி.ஓ.பி.,யால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் பயன்படுத்தப்படுகின்றன. இவை தண்ணீரில் கரைவதில்லை. உலோகங்கள் கலந்த ரசாயன வண்ணங்கள் பூசுவதால், ரசாயனம் தண்ணீரில் கரைந்து, நீர்வாழ் உயிரினங்களுக்கு தீங்கு விளைவிக்கிறது.
3 மாவட்டங்கள் எனவே, சுற்றுச்சூழலுக்கு ஏற்ற களிமண் விநாயகர் சிலைகளை வாங்கி கரைக்கவும்.
உடுப்பி, தட்சிண கன்னடா, உத்தர கன்னடா மாவட்டங்களில், 90 சதவீதம் மக்கள் களி மண் விநாயகர் சிலைகளையே வாங்குகின்றனர். இங்கு சாத்தியமாகும்போது, மற்ற மாவட்டங்களில் ஏன் சாத்தியமாவதில்லை?
இதுகுறித்து மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியம், மாவட்டம், தாலுகா நிர்வாகம், உள்ளாட்சி அமைப்புகள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
விநாயகர் சதுர்த்தி கொண்டாடுவோரிடம் பி.ஓ.பி., சிலைகளை பயன்படுத்த மாட்டோம் என்று உறுதிமொழி பெற்ற பின்னரே, அனுமதி வழங்க வேண்டும் என்று உள்ளாட்சி அமைப்புகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
பெங்களூரு நகரம் உட்பட மாநிலத்தின் பல நகரங்களில் பல்வேறு சங்கங்கள் உள்ளன. தண்ணீரில் கரையும் களிமண் விநாயகர் சிலையை வாங்குமாறு, அனைவருக்கும் செய்தி அனுப்பவும்; சுற்றுச்சூழலுக்கு உகந்த விநாயகர் சிலைகளை வணங்குவது குறித்து பள்ளி, கல்லுாரி குழந்தைகள் இடையே விழிப்புணர்வை ஏற்படுத்த சங்கங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
விநாயகர் விழா ஊர்வலத்தின்போது 125 டெசிபலுக்கு மேல் சத்தம் எழுப்பும் பட்டசுகளை வெடிக்கக் கூடாது. இரவு 8:00 மணி முதல் 10:00 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. இந்த விதிமுறையை அனைவரும் பின்பற்ற வேண்டும். பசுமை பட்டாசுகளை வெடிக்கவும்.
பெரிய சவால் புவி வெப்பமடைதல் மற்றும் காலநிலை மாற்றத்தால், உலகம் முழுதும் பெரிய சவாலை சந்தித்து வருகிறது. அதிகரித்து வரும் வெப்பத்தால், ஒரு மாதத்தில் பெய்ய வேண்டிய மழை, ஒரு வாரத்திலும்; ஒரு வாரத்தில் பெய்ய வேண்டிய மழை, ஒரே நாளிலும் பெய்கிறது.
இதனால் பேரழிவுகள் ஏற்படுகின்றன. பூமியை பாதுகாக்கும் பொறுப்பு நம் அனைவருக்கும் உள்ளது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.