அர்த்தமுள்ள சுதந்திர தின பண்டிகை கொண்டாட்டம் அமைச்சர் கிருஷ்ண பைரேகவுடா அறிவிப்பு
அர்த்தமுள்ள சுதந்திர தின பண்டிகை கொண்டாட்டம் அமைச்சர் கிருஷ்ண பைரேகவுடா அறிவிப்பு
ADDED : ஆக 05, 2026 11:13 PM

பெங்களூரு: இம்முறை சுதந்திர தினத்தை, இதுவரை இல்லாத அளவுக்கு மிக சிறப்பாக கொண்டாட, பெங்களூரு நகர் தயாராகி வருகிறது. நாள் முழுதும் கலாசார நிகழ்ச்சிகள், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் நடக்கவுள்ளன.
பெங்களூரு நகர் வளர்ச்சி துறை அமைச்சர் கிருஷ்ண பைரேகவுடா நேற்று அளித்த பேட்டி:
இம்மு றை சுதந்திர தினத்தை, சிறப்பாக கொண்டாட முடிவு செய்துள்ளோம். மக்களின் மகிழ்ச்சி கொண்டாட்டமாக இந்த நிகழ்ச்சி இருக்கும்.
மக்களுக்கு முக்கியத்துவம் ஆகஸ்ட் 15ம் தேதியன்று, பெங்களூரின் விதான்சவுதா முன் பகுதியில், காலை முதல் இரவு 10:00 மணி வரை பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள், கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படும். இதுவரை எப்போதும் இல்லாத அளவுக்கு, நாட்டின் சுதந்திர தினத்தை, பெங்களூரு நகரம் கொண்டாடும் வகையில் இந்த நிகழ்ச்சி இருக்கும். இதில் மக்களே முன்னிலை வகிப்பர்.
பெங்களூரில் பல சமுதாய மக்கள் ஒருங்கிணைந்து வசிக்கின்றனர். இவர்கள் சேர்ந்து கொண்டாடும் சுதந்திர திருவிழாவாக அமையும். சுதந்திர தினத்தை எளிமையாக கொண்டாடினாலும், அர்த்தமுள்ளதாக இருக்கும்.
சுதந்திர தினம் அனைத்து குடிமக்களுக்குமானது. இதுவரை சுதந்திர தினம் கொண்டாட்டம் என்பது, மக்கள் பார்க்கும் ஒரு நிகழ்ச்சியாக இருந்ததே தவிர, பொதுமக்கள் சேர்ந்து கொண்டாடும் பண்டிகையாக மாறவில்லை.
இதை மனதில் கொண்டு, 'சுதந்திர தின பண்டிகை' என, அறிவித்து கொண்டாட திட்டமிட்டோம். இது அரசு நிகழ்ச்சி அல்ல. பெங்களூரு மக்கள் ஒரே இடத்தில் சேர்க்கும் பண்டிகை. அது தான் சுதந்திர தினத்தின் உண்மையான கொண்டாட்டமாகும்.
பல்வேறு மாநிலங்களை பிரதிபலிக்கும் சமுதாயங்களின் அணிவகுப்பு, சம்பிரதாய உடைகள் அணிவது, கிராமிய கலை நிகழ்ச்சிகள், சங்கீதம், நடனம், கைவினை பொருட்கள் கண்காட்சி, சிறார்களுக்கான நிகழ்ச்சி என, அனைத்தும் இருக்கும். இந்த சுதந்திர தினம், பெங்களூரு மக்களுக்கு எப்போதும் மறக்க முடியாததாக இருக்கும்.
வேற்றுமையில் ஒற்றுமை
பெங்களூரில் வசிக்கும் கன்னடர், தமிழர், தெலுங்கு, மலையாளம், மராத்தி, பெங்காலி, குஜராத்தி, ஹிந்தி என, பல மொழி மக்கள், குடகு, மங்களூரு, வட மாவட்டங்கள், மாநிலத்தின் மற்ற பகுதிகளின் பிரதிநிதிகளுடன் பங்கேற்பர். விதான்சவுதா இந்தியாவின் வேற்றுமையில் ஒற்றுமையை பிரதிபலிப்பதாக இருக்கும்.
விதான்சவுதா படிகளின் மீது நிகழ்ச்சிகளை நடத்தும்படி, ஆலோசனை கூறியுள்ளனர்.
சுதந்திர தின பண்டிகை, அன்று காலை 11:00 மணிக்கு, மானெக்ஷா பரேடு் மைதானத்தில் துவங்கும் நிகழ்ச்சி, இரவு 10:00 மணி வரை நடக்கும். பட்டாசு வெடித்து நிகழ்ச்சிகள் நிறைவு பெறும். பொதுமக்கள் நிகழ்ச்சிகளை ரசிக்கும் பார்வையாளராக இல்லாமல், அவற்றில் பங்கேற்க முன் வர வேண்டும். இது மக்களின் பண்டிகை. எங்களுடன் கொண்டாடுங்கள்.
சிறப்பு சுதந்திர பண்டிகை குறித்து பதிவு செய்து கொள்ளுங்கள். இதன் முழு விபரங்கள், அடுத்த 48 மணி நேரத்தில், அரசின் அதிகாரப்பூர்வமான ஊடகங்களில் அறிவிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
