கர்நாடகாவில் எஸ்.ஐ.ஆர்., கணக்கெடுப்பு 80 சதவீதம் பணிகள் நிறைவு என தகவல்
கர்நாடகாவில் எஸ்.ஐ.ஆர்., கணக்கெடுப்பு 80 சதவீதம் பணிகள் நிறைவு என தகவல்
ADDED : ஆக 05, 2026 11:13 PM

பெங்களூரு: ''கர்நாடகாவில் எஸ்.ஐ.ஆர்., மூலம் வாக்காளர்கள் கணக்கெடுப்பு பணிகள் 80 சதவீதம் நிறைவு பெற்றுள்ளன,'' என, மாநில தலைமை தேர்தல் அதிகாரி அன்புகுமார் கூறியுள்ளார்.
பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:
கர்நாடகாவில் எஸ்.ஐ.ஆர்., எனும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணி வரும் 8ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. இதுவரை கணக்கெடுப்பின் மூலம் நிரப்பபட்ட படிவங்களை டிஜிட்டல்மயமாக்கும் பணி, 80 சதவீதம் நிறைவு பெற்றுள்ளது.
இதுவரை எஸ்.ஐ.ஆர்.,ரில் பங்கேற்காதவர், இடம் பெயர்ந்தோர், இறந்தவர்கள், பிறர் என, 1.11 கோடி வாக்காளர்கள் என கணக்கிடப்பட்டுள்ளது.
இவர்களில் 66 லட்சத்து 64,943 பேர் நிரந்தரமாக இடம் பெயர்ந்து உள்ளனர். 16 லட்சத்து 30,872 பேர் இறந்துள்ளனர். 6 லட்சத்து 89,904 பேருக்கு இரட்டை ஓட்டுரிமை உள்ளது.
4 லட்சத்து 88 ஆயிரத்து 974 பேர் சரியான தகவல் அளிக்கவில்லை. 16 லட்சத்து 30 ஆயிரத்து 12 பேரின் நிலை பற்றி தெரியவில்லை.
முறையான ஆவண சரிபார்ப்பு, விசாரணை இல்லாமல் எந்தவொரு வாக்காளரின் பெயரும் தேவையில்லாமல் நீக்கப்படாது. 1.11 கோடி வாக்காளர்கள் பெயர், விபரம், ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களிடம் வழங்கப்பட்டுள்ளன. வரைவு வாக்காளர் பட்டியல் ஆகஸ்ட் 17 ல் வெளியிடப்படும்.
அந்த பட்டியலில் தகுதியுள்ள வாக்காளர்கள் பெயர் விடுபட்டு இருந்தால், படிவம் 6 ன் மூலம் உரிய ஆவணங்களை சமர்ப்பிப்பதன் மூலம் இறுதி வாக்காளர் பட்டியலில் சேர்ந்து கொள்ளலாம். இதுவரை 12.20 லட்சம் பேர் தங்கள் பெயர்களை சேர்க்கவும், திருத்தவும் விண்ணப்பித்து உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
