/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பா.ஜ., மகளிர் தொண்டர்கள் தாம்பூலம் வாங்காமல் அமைச்சர் லட்சுமி அலட்சியம்
/
பா.ஜ., மகளிர் தொண்டர்கள் தாம்பூலம் வாங்காமல் அமைச்சர் லட்சுமி அலட்சியம்
பா.ஜ., மகளிர் தொண்டர்கள் தாம்பூலம் வாங்காமல் அமைச்சர் லட்சுமி அலட்சியம்
பா.ஜ., மகளிர் தொண்டர்கள் தாம்பூலம் வாங்காமல் அமைச்சர் லட்சுமி அலட்சியம்
ADDED : மே 26, 2025 12:16 AM

சிக்கமகளூரு சிக்கமகளூரு நகருக்கு வந்த, மகளிர், குழந்தைகள் நலத்துறை அமைச்சர் லட்சுமி ஹெப்பால்கர், பா.ஜ., மகளிர் தொண்டர்கள் அளித்த மங்கலப் பொருட்களை வாங்க மறுத்துச் சென்றது, சர்ச்சைக்கு காரணமானது.
பெலகாவியில் நடந்த சட்டசபை கூட்டத்தில், பா.ஜ., - எம்.எல்.சி., ரவி, அமைச்சர் லட்சுமி ஹெப்பால்கரை பற்றி அவதுாறாக பேசியதால், காங்கிரஸ் தொண்டர்கள் கொதிப்படைந்தனர். சுவர்ண விதான் சவுதா வளாகத்தில் நுழைந்து, ரவிக்கு இடையூறு செய்தனர்.
அமைச்சரை பற்றி தவறான வார்த்தையை பயன்படுத்தியது தொடர்பாக, போலீசாரிடமும் புகார் அளிக்கப்பட்டது. போலீசார், ரவியை கைது செய்து, ஜீப்பில் அமர்த்தி இரவு முழுதும் சுற்றினர். கரும்புக் காட்டில் வைத்து, அவரை 'என்கவுன்டர்' செய்ய முயற்சி நடந்ததாக, பா.ஜ.,வினர் குற்றஞ்சாட்டினர்.
இந்த சம்பவத்துக்கு பின், அமைச்சர் லட்சுமி ஹெப்பால்கர், ரவியின் சிக்கமகளூரு மாவட்டத்துக்கு வரவில்லை. நேற்று முன்தினம் வாக்குறுதி திட்டங்கள் மாநாட்டிலும், லிங்காயத் சமுதாயம் ஏற்பாடு செய்திருந்த ரேணுகாச்சார்யா ஜெயந்தியிலும் பங்கேற்க, அமைச்சர் லட்சுமி ஹெப்பால்கர் சிக்கமகளூரு வந்திருந்தார். இங்குள்ள அரசு விருந்தினர் இல்லத்தில் தங்கியிருந்தார்.
தங்கள் மாவட்டத்துக்கு வருகை தந்த அமைச்சரை வரவேற்கும் நோக்கில், மகளிர் பா.ஜ., தொண்டர்கள் மஞ்சள், குங்குமம், தேங்காய், பூ, வாழைப்பழம், வெற்றிலை, பாக்கு, வெல்லம் உள்ளிட்ட மங்கலப் பொருட்களுடன் விருந்தினர் இல்லத்துக்கு சென்றனர்.
ஆனால், இவர்களை பாதுகாப்பு ஊழியர் உள்ளே அனுமதிக்கவில்லை. மூன்று மணி நேரத்துக்கும் மேலாக கேட் அருகில் காத்திருந்தனர். ஆனால் அமைச்சர், இவர்களை பார்க்க அனுமதி அளிக்கவில்லை.
வெளியே வந்த லட்சுமி ஹெப்பால்கர், காரில் ஏறிச் சென்றபோதும், தனக்காக கேட் அருகில் காத்திருக்கும் பெண்களை அலட்சியப்படுத்திவிட்டுச் சென்றார். மரியாதைக்கு கூட காரில் இருந்து இறங்கவில்லை. இதனால் பா.ஜ., தொண்டர்கள் அதிருப்தி அடைந்தனர்.
அவர்கள் கூறியதாவது:
எங்கள் ஊருக்கு வந்த அமைச்சருக்கு, ஹிந்து சம்பிரதாயப்படி மஞ்சள், குங்குமம், பூ, தேங்காய் உள்ளிட்ட மங்கலப் பொருட்கள் கொடுக்க சென்றோம். ஆனால் அவர் அந்த பொருட்களை வாங்காமல் சென்றது, அவரது தகுதிக்கு அழகல்ல.
முதல்வர் சித்தராமையாவை போன்று, குங்குமத்தை கண்டால் அமைச்சர் லட்சுமி ஹெப்பால்கருக்கு பயம் என, நினைக்கிறோம். இவரது வீட்டுக்கு சுமங்கலி பெண்கள் சென்றால், மஞ்சள், குங்குமம் தரமாட்டார்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.