/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
அமைச்சர் மல்லிகார்ஜுன் சகோதரர் நிறுவனங்களுக்கு ரூ.25,000 அபராதம்
/
அமைச்சர் மல்லிகார்ஜுன் சகோதரர் நிறுவனங்களுக்கு ரூ.25,000 அபராதம்
அமைச்சர் மல்லிகார்ஜுன் சகோதரர் நிறுவனங்களுக்கு ரூ.25,000 அபராதம்
அமைச்சர் மல்லிகார்ஜுன் சகோதரர் நிறுவனங்களுக்கு ரூ.25,000 அபராதம்
ADDED : ஆக 15, 2025 11:09 PM

தாவணகெரே:விதிகளை மீறியது தொடர்பாக, தோட்டக்கலைத்துறை அமைச்சர் மல்லிகார்ஜுனின் சகோதரருக்கு சொந்தமான நிறுவனம் உட்பட 26 கல்குவாரி ஒப்பந்ததாரர்களுக்கு, சுரங்கம், நில ஆய்வியல் துறை அபராதம் விதித்துள்ளது.
தாவணகெரேவில் உள்ள கல்குவாரிகள், விதிகளை மீறுகின்றனர். இதனால் அரசுக்கு கோடிக்கணக்கான ரூபாய் நஷ்டம் ஏற்படுவதாக, லோக் ஆயுக்தாவுக்கு புகார் வந்தது. இதை தீவிரமாக கருதிய உப லோக் ஆயுக்தா நீதிபதி வீரப்பா, மாவட்ட செயற்படையுடன் நடப்பாண்டு ஜூலையில் தாவணகெரேவுக்கு சென்றார்.
பல்வேறு கல்குவாரிகளை ஆய்வு செய்தபோது, விதிகளை மீறியது கண்டுபிடிக்கப்பட்டது. சம்பந்தப்பட்ட கல்குவாரி ஒப்பந்ததாரர்கள் மீது, நீதிபதி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்துகிறார். அந்த கல்குவாரிகளை ஆய்வு செய்து, அபராதம் விதிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
கர்நாடக சுரங்கம், நில ஆய்வியல் அதிகாரிகள், தாசில்தார், வனத்துறை அதிகாரிகள், சில நாட்களுக்கு முன்பு, தாவணகெரேவில் பல்வேறு கல் குவாரிகளில் ஆய்வு செய்தனர்.
அப்போது கல்குவாரி ஒப்பந்ததாரர்கள், விதிகளை மீறியதும், இவர்களால் அரசுக்கு நஷ்டம் ஏற்படுவதும் தெரிய வந்தது.
விதிகளை மீறியது தொடர்பாக, 72 கல்குவாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இவற்றில் 26 சுரங்க ஒப்பந்ததாரர்களுக்கு தலா 25,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
இவர்களில் தோட்டக்கலைத்துறை அமைச்சர் மல்லிகார்ஜுனின் சகோதரர் கணேஷும் ஒருவராவார். இவர் தாவணகெரேவின், ஹெப்பாலா கிராமத்தில் மூன்று சர்வே எண்களில், தனித்தனியாக மூன்று கல்குவாரிகளை ஒப்பந்தம் எடுத்துள்ளார். இவரது கல்குவாரிகளும் விதிகளை மீறியுள்ளன. சுற்றுச்சூழல் துறையின் அனுமதி பெறவில்லை. ஒப்பந்த விதிகளை மீறியதால், அபராதம் விதிக்கப்பட்டது.