குமாரசாமி மனைவி பற்றி பேச்சு அமைச்சர் எம்.பி.பாட்டீல் வருத்தம்
குமாரசாமி மனைவி பற்றி பேச்சு அமைச்சர் எம்.பி.பாட்டீல் வருத்தம்
ADDED : ஜூன் 24, 2026 10:44 PM

பெங்களூரு: மத்திய அமைச்சர் குமாரசாமி மனைவி அனிதா பெயரில், 100 ஏக்கர் நிலம் உள்ளதாக பேசிய விவகாரத்தில், கர்நாடக தொழில் துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல் தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்துள்ளார்.
ராம்நகரின் பிடதியில் டவுன்ஷிப் அமைக்கும் விவகாரத்தில், முதல்வர் சிவகுமார் - மத்திய கனரக தொழில் துறை அமைச்சர் குமாரசாமி இடையில் நீயா, நானா போட்டி எழுந்துள்ளது.
டவுன்ஷிப் அமைய உள்ள இடத்தில், குமாரசாமி குடும்பத்திற்கு சொந்தமான நிலம் இருப்பதால், அரசியல் காரணங்களுக்காக திட்டத்தை எதிர்க்கின்றனர் என, காங்கிரஸ் தலைவர்கள் கூறுகின்றனர்.
இந்நிலையில், தொழில் துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல் கூறுகையில், 'பிடதி பகுதியில் குமாரசாமி மனைவி அனிதா பெயரில் 100 ஏக்கர் உள்ளது. இதனால் தான் டவுன்ஷிப் திட்டத்தை, மத்திய அமைச்சர் குமாரசாமி குடும்பம் எதிர்க்கிறது' என, சமீபத்தில் கூறினார்.
இதனால் கோபம் அடைந்த அனிதா நேற்று வெளியிட்டுள்ள பதிவில், 'அமைச்சர் எம்.பி.பாட்டீல் கூறுவது போல எனது பெயரில் 100 ஏக்கர் நிலம் இல்லை. 32 ஏக்கர் நிலம் மட்டுமே உள்ளது. அரசியல் ஆதாயத்திற்காக குடும்ப உறுப்பினர்கள், பெண்களை இழுப்பதும், பொய் பிரசாரம் செய்வதும் நல்லதல்ல.
'தனிப்பட்ட விஷயங்களை பற்றி விவாதிக்கும் போது கீழ்தரமான நிலைக்கு இறங்க கூடாது. என் மீதும், குடும்பத்தினர் மீதும் தேவையற்ற குற்றச்சாட்டு சுமத்தினால், சட்டத்தின் மூலம் தகுந்த பதிலடி கொடுப்பேன்' என்று கூறி இருந்தார்.
இதுகுறித்து எம்.பி.பாட்டீல் கூறுகையில், ''பிடதியில் எனது மனைவி பெயரில் நிலம் உள்ளதாக குமாரசாமியே கூறி இருந்தார். அனிதா பெயரில், 100 ஏக்கர் நிலம் உள்ளதாக, அரசியல் வட்டாரத்தில் விவாதம் உள்ளது. அதனால் தான் நானும் கூறினேன்.
''அங்கு, 100 ஏக்கர் நிலம் அவர்களின் குடும்பத்தினருக்கு இல்லாவிட்டால், அதை முன்கூட்டியே தெளிவுபடுத்தி இருக்க வேண்டும். அனிதாவுக்கும், எனக்கும் தனிப்பட்ட விரோதம் இல்லை. அவர் எனக்கு சகோதரி போன்றவர். என் வார்த்தை அவரை புண்படுத்தி இருந்தால் அதற்காக வருத்தம் தெரிவித்து கொள்கிறேன்,'' என்றார்.
