/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
மத கலவரங்களை கட்டுப்படுத்த புதிய சட்டம் மேல்சபையில் அமைச்சர் பரமேஸ்வர் தகவல்
/
மத கலவரங்களை கட்டுப்படுத்த புதிய சட்டம் மேல்சபையில் அமைச்சர் பரமேஸ்வர் தகவல்
மத கலவரங்களை கட்டுப்படுத்த புதிய சட்டம் மேல்சபையில் அமைச்சர் பரமேஸ்வர் தகவல்
மத கலவரங்களை கட்டுப்படுத்த புதிய சட்டம் மேல்சபையில் அமைச்சர் பரமேஸ்வர் தகவல்
ADDED : ஆக 14, 2025 11:16 PM

பெங்களூரு: மாநிலத்தில் அதிகரித்து வரும் மதக்கலவரங்கள், அதனால் ஏற்படும் பின் விளைவுகள் குறித்து, மேல்சபையில் நேற்று தீவிர விவாதம் நடந்தது.
மேல்சபை கேள்வி நேரத்தில், பா.ஜ., உறுப்பினர் கிஷோர், மாநிலத்தில் மதக்கலவரங்கள் அதிகரிக்கிறது. இதை கட்டுப்படுத்த அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என, கேள்வி எழுப்பினார்.
இவருக்கு பதிலளித்த உள்துறை அமைச்சர் பரமேஸ்வர், மதக்கலவரத்தை கட்டுப்படுத்தி, ஒற்றுமையை ஏற்படுத்த அரசு அமைத்துள்ள சிறப்பு செயற்படை, மத ஒற்றுமையை ஏற்படுத்த, அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து விவரித்தார்.
காரசார வாக்குவாதம் இவரது பதில் எதிர்க்கட்சியினருக்கு திருப்தி அளிக்கவில்லை. இதனால் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இடையே காரசார வாக்குவாதம் நடந்தது. மத ஒற்றுமையை சீர் குலைப்போர் மீது, சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.
பா.ஜ., - கிஷோர்: மதக்கலவரங்களை கட்டுப்படுத்த, மாநில அரசு பல நடவடிக்கைகள் எடுத்துள்ளதாக, உள்துறை அமைச்சர் கூறுகிறார். மங்களூரில் சில மாதங்களுக்கு முன், சுஹாஸ் ஷெட்டி கொலை நடந்தது. ஆனால் கொலையானவரின் வீட்டுக்கு சென்று, அவரது குடும்பத்தினருக்கு அமைச்சர் ஆறுதல் கூறவில்லை.
ஆனால் சில நாட்களுக்கு முன், வேற்று மத நபர் ஒருவர் இறந்ததால், அவரது வீட்டுக்கு அமைச்சர் சென்று வந்தார். நீங்கள் (பரமேஸ்வர்) ஏதோ ஒரு ஜாதி, மதத்தை மட்டுமே சார்ந்த அமைச்சர் அல்ல. 6 கோடி கன்னடர்களின் உள்துறை அமைச்சர். ஒவ்வொருவரின் பாதுகாப்பு உங்களின் கடமையாகும்.
காங்., - ஐவான் டிசோசா: கடலோர மாவட்டத்தில் நடக்கும் மதக்கலவரத்துக்கு, யார் காரணம் என்பது அனைவருக்கும் தெரியும். உள்துறை அமைச்சர் பாரபட்சம் பார்க்காமல் நடவடிக்கை எடுத்துள்ளார்.
காங்., - ஹரிபிரசாத்: ரவுடி பின்னணி கொண்ட நபர் இறந்தால், அல்லது ஏதோ காரணங்களால் கொலை செய்யப்பட்டால், அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூற, உள்துறை அமைச்சர் செல்ல வேண்டுமா. கொலை செய்ய துாண்டிவிடும் அமைப்புகளை, முதலில் கட்டுப்படுத்துங்கள். எந்த ஜாதி, மதம் பார்க்காமல் தவறு செய்வோர் மீது, சட்டப்படி நடவடிக்கை எடுங்கள்.
அமைச்சர் பரமேஸ்வர்: மதக்கலவரத்தை கட்டுப்படுத்தவும், உணர்வுகளை துாண்டும் வகையில் பேசுவோரை கட்டுப்படுத்த, புதிய சட்டம் அமல்படுத்தப்படும். உணர்வுகளை துாண்டும் வகையில் பேசுவதால், எப்படிப்பட்ட அசம்பாவிதங்கள் ஏற்படுகின்றன என்பதற்கு, பல உதாரணங்கள் உள்ளன. இதை கட்டுப்படுத்த கடுமையான சட்டம் தேவை.
கலவரத்தை துாண்டுவோர், சமூக வலைதளங்களில் பொய்யான தகவல்களை பரப்புவோர், சமுதாயத்தின் அமைதியை குலைப்போர் மீது, சட்டப்படி நடவடிக்கை எடுப்பது அவசியம்.
மங்களூரு, உடுப்பி, ஷிவமொக்காவில் சமீபத்தில் சில அசம்பாவிதங்கள், தொடர்ந்து நடந்ததால் நக்சல் தடுப்பு படை போன்று, சிறப்பு செயற்படை அமைக்கப்பட்டுள்ளது.
இந்த படை மத ஒற்றுமையை பாழாக்குவோரை கண்காணித்து, நடவடிக்கை எடுப்பர். இப்படை நடப்பாண்டு ஜூன் 11ம் தேதி துவங்கப்பட்டுள்ளது. சமுதாயத்தில் அமைதியை பாதுகாப்பதே, சிறப்பு படை அமைக்கப்பட்டதன் நோக்கமாகும். இது தவிர வேறு எந்த காரணங்களும் இல்லை.
கடலோர மக்கள் கடலோரம் மற்றும் ஷிவமொக்கா பகுதிகளில், விரும்பத்தகாத சம்பவங்கள் தொடர்ந்ததால், சிறப்பு படைகள் அமைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. நான் தேர்தல் வாக்குறுதி அறிக்கை கமிட்டி தலைவராக இருந்த போது, மங்களூருக்கு சென்றிருந்தேன்.
அங்கு தொழிலதிபர்கள் உட்பட, பல்வேறு துறைகளில் பணியாற்றுவோரை சந்தித்தேன். அப்போது அவர்கள், மாநில கடலோர மக்கள் நிம்மதியுடன் வாழும் சூழ்நிலையை உருவாக்கும்படி, வேண்டுகோள் விடுத்தனர். அதன்படி நாங்கள் கடுமையான நடவடிக்கை எடுத்தோம். இப்போது சூழ்நிலை மாறியுள்ளது.
மாநிலத்தில் சமீபத்தில் 10,200 கோடி ரூபாய் முதலீடு செய்ய, ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது. நம் மாநிலத்தில், சட்டம் - ஒழுங்கு சீர் குலைந்திருந்தால், யாராவது இங்கு வந்து முதலீடு செய்வார்களா. சட்டம் - ஒழுங்கு குறித்து, மற்ற மாநிலங்களுடன் ஒப்பிட்டால், கர்நாடகாவில் நல்ல சூழ்நிலை உள்ளது.
முந்தைய அரசுகளுடன் ஒப்பிட்டால், இப்போது நன்றாகவே உள்ளது. எந்த அரசில் எவ்வளவு சம்பவங்கள் நடந்துள்ளன என்பது குறித்து, ஆவணங்களுடன் விவரிப்பேன்.