அமைச்சர் ராமலிங்க ரெட்டிக்கு கூடுதலாக அறநிலைய துறை வழங்க வலியுறுத்தல்
அமைச்சர் ராமலிங்க ரெட்டிக்கு கூடுதலாக அறநிலைய துறை வழங்க வலியுறுத்தல்
ADDED : ஜூன் 16, 2026 06:20 AM

தங்கவயல்: ''நீர்வளத் துறை அமைச்சராக உள்ள ராமலிங்கரெட்டிக்கு கூடுதலாக ஹிந்து அறநிலையத்துறை பொறுப்பையும் வழங்க வேண்டும்,'' என, ஹிந்து அறநிலையத்துறை கோவில்களின் அர்ச்சகர்கள், ஆகம அறிஞர்கள் சங்கத்தின் மாநில அமைப்புச் செயலரும், தங்கவயல் தலைவருமான என்.மஞ்சுநாத் தீட்சித் வலியுறுத்தி உள்ளார்.
இதுகுறித்து நேற்று அவர் அளித்த பேட்டி:
முன்னாள் முதல்வர் சித்த ராமையா தலைமையிலான அரசில், ராமலிங்கரெட்டி, ஹிந்து அறநிலையத் துறையை சிறப்பாக நிர்வகித்தார். பல வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அர்ச்சகர்களின் பிரச்னைகளுக்கு உடனடியாக செவிசாய்த்தார்.
மாநில அர்ச்சகர்கள், ஆகம அறிஞர்கள் மற்றும் ஊழியர்கள் சங்கத் தலைவர் ஸ்ரீவத்சா அளித்த கோரிக்கையை ஏற்று, பல உத்தரவுகளை பிறப்பித்தார்.
'சி' பிரிவு முஜராய் கோவில்களின் அர்ச்சகர்களின் பிள்ளைகளுக்கு கல்வி உதவித் தொகையாக, 7,000 முதல் 1 லட்சம் ரூபாய் வரை வழங்க உத்தரவிட்டார். அர்ச்சகர் மரணம் அடைந்தால், 2 லட்சம் ரூபாய் வரை இழப்பீட்டு உதவித்தொகை வழங்க உத்தரவிட்டார்.
பெங்களூரில் உள்ள எம்.எஸ்., கட்டடத்தின் எதிரே அமைந்துள்ள ஹிந்து அறநிலையத் துறைக்குச் சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்புள்ள நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தன. அவற்றை மீட்டு சம்பந்தப்பட்ட கோவில்களின் பெயரில் பதிவு செய்து, பட்டா மற்றும் நில ஆவணங்களை வழங்கினார்.
எனவே, தற்போதைய அமைச்சரவையில், அவருக்கு, நீர்வளத் துறையுடன் கூடுதலாக ஹிந்து அறநிலையத் துறையையும் ஒப்படைக்க வேண்டும். இதனை ஏற்க தவறினால் நாங்கள் அமைதி போராட்டம் நடத்த வேண்டி இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தங்கவயல் ஒருங்கிணைப்பாளர் குரு தீட்சித், பொதுச் செயலர் மனோஹர் தீட்சித், பொருளாளர் சுதர்ஷன், துணைத் தலைவர்கள் ஷ்யாம் சுந்தர் பட், ராமராவ், இணை அமைப்புச் செயலர் வெங்கடேஷ் மூர்த்தி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
