/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
மடாதிபதி மீது மானநஷ்ட வழக்கு அமைச்சர் சிவராஜ் தங்கடகி அறிவிப்பு
/
மடாதிபதி மீது மானநஷ்ட வழக்கு அமைச்சர் சிவராஜ் தங்கடகி அறிவிப்பு
மடாதிபதி மீது மானநஷ்ட வழக்கு அமைச்சர் சிவராஜ் தங்கடகி அறிவிப்பு
மடாதிபதி மீது மானநஷ்ட வழக்கு அமைச்சர் சிவராஜ் தங்கடகி அறிவிப்பு
ADDED : ஜூலை 07, 2025 11:10 PM

கொப்பால்: ''மடத்திற்கு நிதி ஒதுக்க 25 சதவீதம் கமிஷன் கேட்டதாக, என் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டு கூறியுள்ள, மடாதிபதி பூர்ணானந்தபுரி சுவாமி மீது, மானநஷ்ட வழக்கு தொடருவேன்,'' என, மாநில பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவராஜ் தங்கடகி அறிவித்துள்ளார்.
கொப்பாலில் நேற்று அவர் அளித்த பேட்டி:
நெலமங்களாவில் உள்ள ஸ்ரீசேத்ர தைலேஸ்வரா மடத்தின், புனரமைப்பு பணிக்கு 3.50 கோடி ரூபாய் நிதி ஒதுக்கும்படி, பா.ஜ., ஆட்சியில் பசவராஜ் பொம்மை முதல்வராக இருந்தபோது, 2022ம் ஆண்டு அக்டோபர் 10ம் தேதி உத்தரவிட்டார்.
முதற்கட்டமாக பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை 2 கோடி ரூபாய் ஒதுக்கியது. மீதி பணம் ஒதுக்கப்படாமல் இருந்தது. 2023ம் ஆண்டு ஜனவரி 18ம் தேதி, பசவராஜ் பொம்மை பிறப்பித்த இன்னொரு உத்தரவில், மடத்திற்கு 2 கோடி ரூபாய் ஒதுக்கியது போதும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.
ஆனால், முதலில் பிறப்பித்த உத்தரவு நகலை வைத்து, தைலேஸ்வரா மடத்தின் மடாதிபதி பூர்ணானந்தபுரி சுவாமி, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
நீதிமன்றம்
இரண்டாவது பிறப்பித்த உத்தரவை, அவர் நீதிமன்றத்திடம் சமர்ப்பிக்கவில்லை. முதலில் பிறப்பித்த உத்தரவை வைத்து, மீதம் 1.50 கோடி ரூபாய் ஒதுக்க வேண்டும் என்று அரசுக்கு, நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இரண்டாவது உத்தரவை மடாதிபதி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்காதது பற்றி, நாங்கள் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு செல்வோம். மடாதிபதி நீதிமன்றத்தை ஏமாற்றி உள்ளார்.
மீதம் 1.50 கோடி ரூபாய் ஒதுக்க, நான் 25 சதவீத கமிஷன் கேட்டதாக, அவர் பொய் சொல்லி உள்ளார். அவர் மீது மானநஷ்ட வழக்கு தொடர உள்ளேன்.
கமிஷன் கேட்டதற்கு ஆதாரம் இருந்தால் அவர் வெளியிடட்டும். அப்படி செய்தால் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வது மட்டுமின்றி, அரசியலில் இருந்தே ஓய்வு பெற்று விடுகிறேன்.
மடாதிபதி பா.ஜ., அரசில் அமைச்சர், எம்.எல்.சி., - எம்.எல்.ஏ.,வாக இருந்தவர். இன்னும் அரசியலில் இருப்பது போன்று பேசி வருகிறார். அரசியல் பேசுவதாக இருந்தால், காவி உடையை களைந்துவிட்டு வரட்டும்.
காவி உடை
மடாதிபதிகளுக்கும், காவி உடைக்கும் மரியாதை கொடுக்கும் நபர் நான். காவி தியாகத்தின் சின்னம். இதை பூர்ணானந்தபுரி சுவாமி மறந்து விட வேண்டாம்.
ஆர்.எஸ்.எஸ்., தேசபக்தி அமைப்பு என்றும், அங்கு இருந்து வந்துள்ளோம் என்று, பா.ஜ., தலைவர்கள் கூறுகின்றனர். அப்படி என்றால் பெண்களை அவமதிக்கும் வகையில் பேச வேண்டும் என்று, ஆர்.எஸ்.எஸ்.,தான் சொல்லி கொடுத்துள்ளதா? தலைமை செயலர் ஷாலினி, கலபுரகி கலெக்டர் பவுசியா தரணம் பற்றி, பா.ஜ.,வின் ரவிகுமார் பேசியது ஏற்றுக்கொள்ள முடியாத வார்த்தை.
சித்தராமையாவை தேசிய அரசியலுக்கு அழைக்கும் நோக்கம், கட்சி மேலிடத்திடம் இல்லை. 'உங்களுக்கு கொடுக்கப்பட்ட வேலையை மட்டும் பாருங்கள்' என, அனைத்து அமைச்சர்களுக்கும், கட்சி மேலிடம் உத்தரவிட்டு உள்ளது.
மேலிட பொறுப்பாளர், எம்.எல்.ஏ.,க்களுடன் ஆலோசனை நடத்துவதில் என்ன தவறு உள்ளது? கட்சியை வலுப்படுத்த அனைத்து முயற்சிகளையும், மேலிட பொறுப்பாளர் எடுக்கிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.

