/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
வீடுகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவதில் அமைச்சர்கள் தயக்கம்
/
வீடுகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவதில் அமைச்சர்கள் தயக்கம்
வீடுகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவதில் அமைச்சர்கள் தயக்கம்
வீடுகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவதில் அமைச்சர்கள் தயக்கம்
ADDED : ஏப் 03, 2025 07:37 AM
பெங்களூரு : பெங்களூரு உட்பட, கர்நாடகா முழுதும் மக்களின் வீடுகள், தோட்டங்கள், சாலைகள் என, அனைத்து இடங்களிலும், கண்காணிப்பு கேமராக்களை காணலாம். ஆனால் அமைச்சர்கள் வசிக்கும், அரசு பங்களாக்களில் கண்காணிப்பு கேமரா பாதுகாப்பு இல்லை.
குற்றங்களை கண்டுபிடிப்பதில், கண்காணிப்பு கேமராக்கள், போலீசாருக்கு மிகவும் உதவுகின்றன. குற்றவாளிகளை அடையாளம் காட்டுகின்றன.
கர்நாடகா முழுதும் நகரங்கள் மட்டுமின்றி, கிராமங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படுகின்றன. தங்கள் பயிர்களின் பாதுகாப்புக்கு கூட, இப்போது கண்காணிப்பு கேமராக்களை விவசாயிகள் பொருத்துகின்றனர்.
பெங்களூரில் பெரும்பாலும் அனைத்து சாலைகளிலும் சட்டம் - ஒழுங்கு போலீசார், போக்குவரத்து பிரிவு போலீசார் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தியுள்ளனர்.
மற்றொரு பக்கம் பெங்களூரு மாநகராட்சி சார்பிலும், கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. போக்குவரத்து விதிகளை மீறுவோரை கண்காணிக்க, கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இவை வாகன பதிவு எண், மக்களின் முகத்தை தெளிவாக போட்டோ, வீடியோ பதிவு செய்யும் திறன் கொண்டவை.
பொது மக்களும் கூட, பாதுகாப்புக்காக தங்களின் வீடுகளின் முன்பாக இத்தகைய கேமராக்கள் பொருத்தியுள்ளனர். ஆனால் அமைச்சர்களின் அரசு இல்லங்களில், கண்காணிப்பு கேமராக்கள் காணப்படவில்லை.
தன்னை ஹனிடிராப் செய்ய முயற்சி நடப்பதாக, சட்டசபையில் விவரித்த கூட்டுறவுத் துறை அமைச்சர் ராஜண்ணா, 'என் வீட்டில் கண்காணிப்பு கேமரா இல்லை. எனவே எந்த சாட்சிகளும் இல்லை' என கூறியிருந்தார்.
இவரது இல்லம் உட்பட பல அமைச்சர்களின் இல்லங்களில், போதிய பாதுகாப்பு இல்லை. அமைச்சர்களின் பங்களாக்களை நிர்வகிக்கும் பொதுப்பணித் துறை அதிகாரிகள், கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் என, பல முறை வேண்டுகோள் விடுத்தும் அமைச்சர்கள் ஒப்புதல் அளிக்கவில்லை. எனவே, அவர்களின் இல்லங்களுக்கு கேமரா பொருத்தவில்லை.
முதல்வர் சித்தராமையாவின், 'காவிரி' இல்லத்தில் பல கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. தன் சொந்த செலவிலும், சில கண்காணிப்பு கேமராக்களை முதல்வர் பொருத்திக் கொண்டார். ஐந்து அமைச்சர்கள் மட்டும், தனிப்பட்ட முறையில் இத்தகைய வசதிகள் செய்துள்ளனர். சபாநாயகர், மேல்சபை தலைவர் உட்பட பலரின் வீடுகளில் அதிகாரப்பூர்வமான கண்காணிப்பு கேமராக்கள் இல்லை.
பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறியதாவது:
சில அமைச்சர்கள் கண்காணிப்பு கேமராக்கள் தேவை என, கூறி கேமராக்கள் பொருத்தி கொண்டனர். இதில் பதிவாகும் காட்சிகள், அவர்கள் வசம் இருக்கும். பல அமைச்சர்கள் கண்காணிப்பு கேமராக்கள் தேவையில்லை என கூறி விட்டனர்.
ஏதாவது அசம்பாவிதங்கள் நடந்தால், சாட்சிகள் கிடைக்காது. அரசு சார்பில் கேமராக்கள் பொருத்தினால், அதை கட்டுப்பாட்டு அறைக்கு லிங்க் செய்ய வேண்டும். அவற்றில் பதிவாகும் காட்சிகள், அரசின் கட்டுப்பாட்டுக்குள் வரும். இத்தகைய காட்சிகள், தகவல் அறியும் உரிமை சட்டத்துக்கு பொருந்தும்.
சமூக ஆர்வலர்கள் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், அமைச்சர்கள் இல்லங்களில் பதிவான போட்டோக்கள், வீடியோக்களை பெற முற்படலாம். இதே காரணத்தால் பல அமைச்சர்கள், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர். சிலர், தங்களின் சொந்த செலவில் கேமராக்கள் பொருத்திக் கொள்கின்றனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.