/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பூங்காக்களில் நேர கட்டுப்பாடு மாநகராட்சிக்கு அமைச்சர் கடிதம்
/
பூங்காக்களில் நேர கட்டுப்பாடு மாநகராட்சிக்கு அமைச்சர் கடிதம்
பூங்காக்களில் நேர கட்டுப்பாடு மாநகராட்சிக்கு அமைச்சர் கடிதம்
பூங்காக்களில் நேர கட்டுப்பாடு மாநகராட்சிக்கு அமைச்சர் கடிதம்
ADDED : ஜூலை 14, 2025 05:41 AM

பெங்களூரு : 'பூங்காக்களை நாள் முழுதும் பயன்படுத்த, பொது மக்களுக்கு அனுமதியளிக்க வேண்டாம்' என, போக்குவரத்து துறை அமைச்சர் ராமலிங்கரெட்டி, பெங்களூரு மாநகராட்சிக்கு அறிவுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக, பெங்களூரு மாநகராட்சி தலைமை கமிஷனருக்கு, அமைச்சர் ராமலிங்க ரெட்டி எழுதிய கடிதம்:
பெங்களூரில் உள்ள பூங்காக்களில், பல ஆண்டுகளாக அதிகாலை 5:30 மணி முதல் 10:00 மணி வரையிலும்; மாலை 4:00 மணி முதல் இரவு 10:00 மணி வரையிலும் மட்டுமே, பொது மக்களின் பயன்பாட்டுக்கு அனுமதி இருந்தது. மற்ற நேரங்களில் பூங்கா நிர்வகிப்பு பணிகள் நடந்தன.
ஆனால் சமீபத்தில் அதிகாலை 5:30 மணி முதல் இரவு 10:00 வரை அனுமதியளித்து, பெங்களூரு மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.
இதன் விளைவாக பூங்காவை சுத்தம் செய்ய, களைகளை அகற்றுவது, தண்ணீர் பாய்ச்சுவது போன்ற நிர்வகிப்பு பணிகளுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது. சரியாக நிர்வகிக்க முடியவில்லை.
காலை 11:00 மணி முதல் மாலை 4:00 மணி வரையிலும்; இரவு 8:00 மணி முதல் இரவு 10:00 மணி வரை பொது மக்கள் பூங்காக்களை பயன்படுத்துவது இல்லை. இந்த நேரங்களில் புகை பிடிப்பது, குடிகாரர்கள், திருடர்களின் நடமாட்டம் காணப்படுகிறது.
இந்த நேரங்களில், பூங்காக்களுக்கு வரும் மூத்த குடிமக்கள் பாதிப்படைகின்றனர். நகரின் பெரும்பாலான பூங்காக்கள், சிறிய பூங்காக்களாகும்.
குடியிருப்பு பகுதிகளை ஒட்டியுள்ளன. இங்கு சமூக விரோத செயல்கள் நடப்பதால், இப்பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு தொந்தரவு ஏற்படுகிறது.
இதை தவிர்க்கும் நோக்கில், அதிகாலை 5:00 மணி முதல் 11:00 மணி வரையிலும்; மாலை 4:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை மட்டும், பூங்காக்களை பயன்படுத்த அனுமதி அளிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.