'வாக்குறுதி திட்டங்களை தவறாக பயன்படுத்துவது சட்டவிரோதம்'
'வாக்குறுதி திட்டங்களை தவறாக பயன்படுத்துவது சட்டவிரோதம்'
ADDED : ஜூன் 15, 2026 10:29 PM

பெங்களூரு: 'கர்நாடகாவில் ஐந்து வாக்குறுதி திட்டங்களும் நிறுத்தப்படாது. அரசை ஏமாற்றி, வாக்குறுதி திட்டங்களை தவறாக பயன்படுத்துவது சட்டவிரோதமானது' என முன்னாள் முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
அவர் அறிக்கை:
வாக்குறுதி திட்டங்களை, பா.ஜ., துவக்கத்தில் இருந்து எதிர்த்து வருகிறது. ஏழைகளுக்கு எதிரான அவர்கள், வாக்குறுதி திட்டங்கள் நிறுத்தப்படும் என வதந்திகளை பரப்புகின்றனர். ஜி.எஸ்.டி., வரி வசூலிப்பதில் நாட்டிலேயே கர்நாடகா இரண்டாவது இடத்தில் உள்ளது. இதெல்லாம் மாநில அரசின் கஜானா காலியாகவில்லை என்பதை எடுத்து காட்டுகிறது.
வாக்குறுதி திட்டங்களை கர்நாடகாவில் எதிர்க்கும் பா.ஜ., மத்திய பிரதேசம், பீஹார், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் செயல்படுத்துவது வேடிக்கையாக இருக்கிறது.
வாக்குறுதி திட்டங்கள், தகுதியற்றவர்களுக்கு செல்வதை தடுப்பது அரசின் கடமையாகும். இதை மக்களும் புரிந்து கொள்ள வேண்டும். மாநில அரசை ஏமாற்றி, வாக்குறுதி திட்டங்களை தவறாக பயன்படுத்துவது சட்டவிரோதமானது. இவ்விஷயத்தில் எதிர்க்கட்சியினர், அரசுக்கு உதவ வேண்டும்.
ஐந்து வாக்குறுதி திட்டங்களும் நிறுத்தப்படாது. அடுத்த இரண்டரை ஆண்டுகள் மட்டுமில்லாமல், அடுத்த தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சிக்கு வரும்போதும் வாக்குறுதி திட்டங்கள் தொடரும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
