காங்கிரஸ் வேட்பாளர் மனு நிராகரிக்க ம.ஜ.த., கோரிக்கை
காங்கிரஸ் வேட்பாளர் மனு நிராகரிக்க ம.ஜ.த., கோரிக்கை
ADDED : ஜூன் 12, 2026 03:02 AM
பெங்களூரு: கர்நாடக மேல்சபையில் காலியாகும் 7 இடங்களுக்கு, வரும் 18ம் தேதி தேர்தல் நடக்கவுள்ளது. இந்த தேர்தலில் காங்கிரஸ் 5 இடங்களுக்கும், பா.ஜ., 2; ம.ஜ.த., ஒரு இடங்களுக்கும் வேட்பாளரை நிறுத்தியுள்ளது.
இந்நிலையில், தேர்தல் அதிகாரியான சட்டசபை செயலர் விசாலாட்சியிடம், ம.ஜ.த., வேட்பாளர் கோவிந்தராஜ் நேற்று அளித்த மனுவில், 'எம்.எல்.சி., தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ள காங்கிரசின் மலவள்ளி சிவண்ணா மீது நான்கு கிரிமினல் வழக்குகள் உள்ளன. வேட்பு மனுவில் அதை பற்றி குறிப்பிடாமல் மறைத்துள்ளார். அவரது மனுவை நிராகரிக்க வேண்டும்' என, குறிப்பிட்டு இருந்தார்.
இதுகுறித்து மலவள்ளி சிவண்ணா கூறுகையில், ''என் மீது எந்த குற்ற வழக்கும் இல்லை. வேட்பு மனுவில் உண்மையை மறைக்க வேண்டிய அவசியமும் இல்லை.
''முன்னாள் முதல்வர் சித்தராமையாவின் ஆதரவாளராக இருப்பதால் என்னை பார்த்தாலே, பா.ஜ., - எம்.எல்.சி., விஸ்வநாத்துக்கு பிடிக்கவில்லை. அவரது துாண்டுதலின்படி என் வேட்புமனுவை நிராகரிக்க, கோவிந்தராஜ் மனு அளித்துள்ளார்,'' என்றார்.
