/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
மன்னிப்பு கோரினார் ம.ஜ.த., - எம்.எல்.ஏ.,
/
மன்னிப்பு கோரினார் ம.ஜ.த., - எம்.எல்.ஏ.,
ADDED : ஆக 27, 2025 08:08 AM

மைசூரு : ''நான், தலித்களுக்கு எதிரானவன் அல்ல. அவர்களுக்காக பல விஷயங்களை செய்துள்ளேன். நான் தவறு ஏதாவது செய்திருந்தால், மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்,'' என, சாமுண்டீஸ்வரி ம.ஜ.த., - எம்.எல்.ஏ., ஜி.டி.தேகவுடா தெரிவித்தார்.
நடந்து முடிந்த கர்நாடக சட்டசபை மழைகாலக் கூட்டத்தொடரில் கர்நாடக கூட்டுறவு சொசைட்டி திருத்த மசோதா - 2025ல், பெண்கள், தலித்களுக்கு இடஒதுக்கீடு அளித்தது தொடர்பாக ஜி.டி.தேகவுடா பேசியிருந்தார்.
இவரின் பேச்சுக்கு பல்வேறு தலித் அமைப்புகள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன.
தன் பேச்சு குறித்து மைசூரில் தேவகவுடா அளித்த பேட்டி:
என் அறிக்கை தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. அரசு சிபாரிசு செய்யும் உறுப்பினர்களை சேர்க்கவும், ஒரு பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு அந்தஸ்து வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தேன். இதை தவறாக புரிந்து கொண்டு, பலரும் என்னை விமர்சித்து, மோசமான வார்த்தைகளை பயன்படுத்துகின்றனர். அரசியல் அமைப்பையும் அவமதிக்கின்றனர்.
நான் தலித்களுக்கு எதிரானவன் அல்ல. அவர்களுக்காக பல விஷயங்களை செய்துள்ளேன். நான் தவறு ஏதாவது செய்திருந்தால், மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.
அரசியல் வாழ்க்கையில் என் மீது எந்த புகாரும் பதிவு செய்யப்படவில்லை. இதுதொடர்பாக புகார் அளிக்கப்பட்டாலும், என்னை பற்றி தவறாக பேசுபவர்கள் மீது நான் புகார் அளிக்கமாட்டேன். அதை அன்னை சாமுண்டீஸ்வரி பார்த்துக் கொள்வார்.
இவ்வாறு அவர் கூறினார்.