/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பா.ஜ.,வில் இருந்து எம்.எல்.ஏ., எத்னால் நீக்கம்
/
பா.ஜ.,வில் இருந்து எம்.எல்.ஏ., எத்னால் நீக்கம்
ADDED : மார் 27, 2025 05:44 AM

பெங்களூரு: கட்சியின் ஒழுக்கத்தை மீறியதாக, எம்.எல்.ஏ., பசனகவுடா பாட்டீல் எத்னால், கட்சியில் இருந்து ஆறு ஆண்டுகள் நீக்கப்பட்டுள்ளார்.
விஜயபுரா தொகுதி பா.ஜ., - எம்.எல்.ஏ., பசனகவுடா பாட்டீல் எத்னால், 61. மூத்த தலைவரான இவர், மத்திய அமைச்சராகவும் பணியாற்றியவர். 2023 சட்டசபை தேர்தலுக்கு பின், கர்நாடக பா.ஜ., தலைவர் பதவி அல்லது சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் பதவி எதிர்பார்த்தார். இரண்டுமே கிடைக்கவில்லை. இதனால் மேலிடம் மீது அதிருப்தி அடைந்தார்.
பா.ஜ., தலைவராக நியமிக்கப்பட்ட விஜயேந்திராவை, தொடர்ந்து விமர்சித்து வந்தார். கட்சி மேலிட தலைவர்களையும் அவ்வப்போது விமர்சனம் செய்தார்.
இதனால் கடந்த மாதம் 10ம் தேதி பா.ஜ., மத்திய ஒழுங்கு நடவடிக்கை குழு, எத்னாலுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது. “இந்த நோட்டீசிற்கு விளக்கம் அளிக்க மாட்டேன்,” என ஊடகம் முன்னிலையில் அவர் கூறினார்.
நன்னடத்தை
ஆனால் கட்சி மேலிடத்துக்கு அவர் விளக்கம் அளித்த விஷயம், அம்பலமானது. “கட்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் பொது இடத்தில் பேச மாட்டேன்,” என, அவர் உத்தரவாதம் அளித்திருந்தார்.
அதன் பின், சில நாட்கள் அமைதியாக இருந்தவர், மீண்டும் விஜயேந்திராவுக்கு எதிராக பேச ஆரம்பித்தார். இதை எல்லாம் கவனித்து வந்த மத்திய ஒழுங்கு நடவடிக்கை குழு, பா.ஜ.,வில் இருந்து எத்னாலை ஆறு ஆண்டுகள் நீக்கி நேற்று உத்தரவு பிறப்பித்தது.
அந்த உத்தரவில், 'எத்னால் பெயர், முகவரி குறிப்பிடப்பட்டு இருந்தது. பிப்ரவரி 10ம் தேதி அனுப்பிய ஷோ காஸ் நோட்டீசிற்கு நீங்கள் அளித்த பதிலை, கட்சியின் மத்திய ஒழுங்கு நடவடிக்கை குழு பரிசீலித்தது.
நன்னடத்தை உறுதி அளித்த போதிலும், நீங்கள் மீண்டும், மீண்டும் கட்சியின் ஒழுக்கத்தை மீறியதை தீவிரமாக கவனித்துள்ளோம்.
இதனால் கட்சியின் முதன்மை உறுப்பினர் பதவியில் இருந்து ஆறு ஆண்டுகளுக்கு உங்களை நீக்க முடிவு செய்யப்பட்டுள்ளது' என கூறப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பு வெளியானபோது, எத்னால் டில்லியில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. எத்னால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதை சில இடங்களில், பட்டாசு வெடித்து பா.ஜ., தொண்டர்கள் கொண்டாடினர்.
பசனகவுடா பாட்டீல் எத்னாலை, பா.ஜ., கட்சியில் இருந்து நீக்கியது இது முதல்முறை அல்ல. 2015ம் ஆண்டு கட்சி மேலிடம் உத்தரவையும் மீறி எம்.எல்.சி., தேர்தலில் போட்டியிட்டதால், ஆறு ஆண்டுகள் நீக்கப்பட்டார். ஆனால் 2018ல் மீண்டும் கட்சியில் சேர்த்துக் கொள்ளப் பட்டார்.