பா.ஜ., ஆபீசில் காவலாளி வேலைக்கு எம்.எல்.ஏ., மானப்பா வஜ்ஜல் தயார்
பா.ஜ., ஆபீசில் காவலாளி வேலைக்கு எம்.எல்.ஏ., மானப்பா வஜ்ஜல் தயார்
ADDED : ஜூன் 28, 2026 10:59 PM

ராய்ச்சூர்: ''நான் கட்சி மாறி ஓட்டு போட்டதை நிரூபித்தால், எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்துவிட்டு, பா.ஜ., அலுவலக காவலாளியாக வேலை செய்ய தயாராக உள்ளேன்,'' என, மானப்பா வஜ்ஜல் கூறினார்.
எம்.எல்.சி., தேர்தலில் காங்கிரசுக்கு ஆதரவாக ஓட்டு போட்டவர்கள் என கூறி, பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள் சிலரின் பெயர்களை ஊடகங்கள் வெளியிட்டுள்ளன. இதில், ராய்ச்சூரின் லிங்ககூகுர் எம்.எல்.ஏ., மானப்பா வஜ்ஜல் பெயரும் இருந்தது.
இந்நிலையில், அவர் கூறிய தாவது:
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பின், நான் ஒப்பந்தம் எடுத்து நடத்திய தனியார் நிறுவனத்தை மூடினர். வரி பாக்கி என்று கூறி என்னிடம் இருந்து 172 கோடி ரூபாய் வசூலித்தனர். இத்தகையவர்களுக்கு ஆதரவாக நான் ஓட்டு போடுவேனா...
சில ஊடகங்கள் கட்சி மாறி ஓட்டு போட்டவர்கள் பெயரில் எனது பெயரையும் சேர்த்து உள்ளன. அதற்கான ஆதாரங்களை கொடுத்தாலோ அல்லது நிரூபித்தாலோ எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்து விட்டு, அரசியலில் இருந்தும் விலகி விடுகிறேன். பா.ஜ., அலுவலகத்தில் காவலாளியாக வேலை செய்யவும் தயாராக உள்ளேன்.
எனது தொகுதிக்கு அரசிடம் இருந்து, ஒரு ரூபாய் கூட நிதி கிடைக்கவில்லை. கட்சி என்னை மரியாதையுடன் நடத்துகிறது. கட்சிக்கு எதிராக செயல்பட வேண்டும் என்று ஒரு போதும் நினைத்ததும் இல்லை. எனக்கு பணம் தேவை இல்லை. யாரிடமும் சென்று கேட்டதும் இல்லை. கடவுள் எனக்கு எல்லாம் கொடுத்துள்ளார்.
அமைச்சர் பிரியங்க் கார்கேவுக்கு இப்போது தான், 47 வயது ஆகிறது. நுாறு ஆண்டு கால வரலாறு கொண்ட, ஆர்.எஸ்.எஸ்., பற்றி பேச அவருக்கு என்ன உரிமை உள்ளது. கட்சியில் பெயர் சம்பாதித்து கொள்ள அவர் இப்படி பேசுகிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.
