சிவகுமாருக்கு பிறந்த நாள் பரிசு எம்.எல்.ஏ., ரங்கநாத் நம்பிக்கை
சிவகுமாருக்கு பிறந்த நாள் பரிசு எம்.எல்.ஏ., ரங்கநாத் நம்பிக்கை
ADDED : ஏப் 28, 2026 04:21 AM

பெங்களூரு: ''துணை முதல்வர் சிவகுமாருக்கு, பிறந்த நாள் பரிசு கிடைக்கும். விரைவில் அவருக்கு நல்ல பதவி கிடைக்கும்,'' என, குனிகல் காங்., - எம்.எல்.ஏ., ரங்கநாத் தெரிவித்தார்.
இது குறித்து, பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:
நாம் நமது பணியை, நேர்மையான முறையில் செய்ய வேண்டும். பிரதிபலன்களை கடவுளிடம் விட்டு விட வேண்டும். அதே போன்று, எங்கள் தலைவர் சிவகுமாரும், தனக்களிக்கப்பட்ட பொறுப்புகளை, திறம்பட நிர்வகித்துள்ளார். வரும் நாட்களில் அவருக்கு, நல்ல பதவி கிடைக்க வேண்டும் என்பது, எங்களின் விருப்பமாகும். இவ்விஷயத்தில் கட்சி மேலிடம், சரியான முடிவை எடுக்கும் என, நம்புகிறோம்.
சிவகுமாருக்கு மே 15ல் பிறந்த நாளாகும். அதற்குள் அவருக்கு இனிப்பான செய்தி கிடைக்கலாம். அவருக்கு பிறந்த நாள் பரிசு கிடைக்கும். விரைவில் நல்ல பதவியில் அமர்வார் என்ற நம்பிக் கை, எனக்கு உள்ளது.
அதிகார பகிர்வு தொடர்பாக, கட்சிக்குள் ஒப்பந்தம் நடந்துள்ளது என, நாங்கள் நினைக்கிறோம். ஆனால் எந்த விதமான ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது என்பதை, மேலிடம் தெளிவுப்படுத்த வேண்டும். அதிகார பகிர்வு குறித்து ஏற்பட்டுள்ள குழப்பத்துக்கு, முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இதை நாங்கள் மட்டுமின்றி, அனைவரும் கூறுகின்றனர்.
முதல்வர் சித்தராமையா தற்போது நல்லாட்சி நடத்துகிறார். ஆனால் வரும் நாட்களில், சிவகுமாருக்கும் முதல்வர் பதவி கிடைக்க வேண்டும் என்பது, எங்களின் ஆசையாகும். மேலிடம் என்ன முடிவு எடுத்தாலும், அதற்கு நாங்கள் கட்டுப்படுவோம். மேலிடம் நல்ல முடிவை எடுக்கும் என, நம்புகிறோம். எதற்கும் காலம் வர வேண்டும்.
இவ்வாறு கூறினார்.
