/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
முதல்வர் பதவிக்கு போடப்பட்ட ஒப்பந்தம் சிவகுமார் ஆதரவு எம்.எல்.ஏ., மனம் திறப்பு
/
முதல்வர் பதவிக்கு போடப்பட்ட ஒப்பந்தம் சிவகுமார் ஆதரவு எம்.எல்.ஏ., மனம் திறப்பு
முதல்வர் பதவிக்கு போடப்பட்ட ஒப்பந்தம் சிவகுமார் ஆதரவு எம்.எல்.ஏ., மனம் திறப்பு
முதல்வர் பதவிக்கு போடப்பட்ட ஒப்பந்தம் சிவகுமார் ஆதரவு எம்.எல்.ஏ., மனம் திறப்பு
ADDED : ஜூன் 29, 2025 11:09 PM

ராம்நகர்: ''கர்நாடகாவின் சித்தராமையா, சிவகுமார் இடையில் முதல்வர் பதவிக்கான ஒப்பந்தம், டில்லியில் சோனியா முன்பு நடந்தது,'' என்று, சிவகுமார் ஆதரவு எம்.எல்.ஏ., இக்பால் ஹுசேன் புது குண்டு போட்டு உள்ளார்.
கர்நாடக சட்டசபைக்கு 2023 மே மாதம் தேர்தல் நடந்தது. முதல்வர் பதவிக்கு சித்தராமையா, சிவகுமார் இடையில் போட்டி ஏற்பட்டது. பதவியை பிடிக்க டில்லியில் இருவரும், 'லாபி' நடத்தினர்.
ஒரு வழியாக சித்தராமையாவுக்கு முதல்வர் பதவியும், சிவகுமாருக்கு துணை முதல்வர் பதவியும் கிடைத்தது. ஆளுக்கு இரண்டரை ஆண்டுகள் முதல்வர் பதவி என்று, கட்சி மேலிடம் ஒப்பந்தம் போட்டு உள்ளது என்று தகவல் வெளியாகின. ஆனால் அதுபற்றி உறுதியான தகவல் இல்லாமல் இருந்தது.
இந்நிலையில் சிவகுமார் ஆதரவாளரான ராம்நகர் காங்கிரஸ் எம்.எல்.ஏ., இக்பால் ஹுசேன் நேற்று அளித்த பேட்டி:
பிராமண்ட வெற்றி
கடந்த 2023 சட்டசபை தேர்தலுக்கு முன்பு, கட்சியின் பலம் என்னவென்று அனைவருக்கும் தெரியும். தேர்தலில் பிரமாண்ட வெற்றி பெற யார் போராடினர்; வியர்வை சிந்தினர் என்பது அனைவருக்கும் தெரியும். மாநில தலைவர் வகுத்த உக்தி, திட்டங்கள் தான் வெற்றிக்கு காரணம்.
ஊகங்களை எப்போதும் நான் நம்புவது இல்லை. எனக்கு வெளிப்படையாக பேசும் குணமே உள்ளது. கட்சி மேலிடம் அனைத்து நிலைமையையும் அறிந்து உள்ளது. இன்னும் 3 மாதத்தில் சிவகுமார் முதல்வர் ஆவார். சரியான நேரத்தில் அவருக்கு முதல்வர் பதவி கொடுக்க, கட்சி மேலிடம் உரிய முடிவு எடுக்கும்.
அதிகார மையம்
முதல்வர் பதவிக்கு மேலிடம் ஒப்பந்தம் எதுவும் போடவில்லை. மேலிடம் சொல்வதை கேட்பேன் என்று, சித்தராமையா ஒரு முறை கூறினார். தேர்தல் முடிந்ததும் நாங்கள் அனைவரும் தான் டில்லியில் இருந்தோம். சித்தராமையா, சிவகுமார் இடையில் முதல்வர் பதவிக்கான ஒப்பந்தம் சோனியா, ராகுல், மல்லிகார்ஜுன கார்கே முன்பு போடப்பட்டது. அனைவரும் பேசி முடிவு எடுத்தனர். இந்த ஒப்பந்தம் முதல்வர் தரப்புக்கும் தெரியும்.
அமைச்சர் ராஜண்ணா புரட்சி நடக்க உள்ளதாக கூறி உள்ளார். பதவி, அதிகாரம் ஒருவருக்கு மட்டும் சொந்தமில்லை. ஏதாவது ஒரு சூழ்நிலையில் கைமாறி தான் ஆக வேண்டும்.
ஒருவர் பதவிக்கு வருவதை புரட்சி என்று கூற முடியாது. இன்னொரு கட்சி அரசை கவிழ்த்தால், அதை புரட்சி என்று சொல்லலாம். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. அரசு வலுவாக உள்ளது. காங்கிரசில் பல அதிகார மையங்கள் இல்லை. ஒரே ஒரு அதிகார மையமாக கட்சி மேலிடம் உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதுகுறித்து சித்தராமையா ஆதரவு அமைச்சர் மஹாதேவப்பா கூறுகையில், ''சித்தராமையா, சிவகுமார் இடையில் முதல்வர் பதவிக்கான ஒப்பந்தம் சோனியா முன்பு நடந்தது பற்றி, எங்களிடம் எந்த தகவலும் இல்லை. சித்தராமையா தற்போது முதல்வராக உள்ளார். அவரே ஐந்து ஆண்டுகளும் நீடிப்பார் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது,'' என்றார்.