/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
எம்.எல்.ஏ.,க்கள் தங்களின் தொகுதிகளுக்கு, மாநில அரசிடம் நிதியுதவி பெறுவதில் கிடுக்கிப்பிடி!
/
எம்.எல்.ஏ.,க்கள் தங்களின் தொகுதிகளுக்கு, மாநில அரசிடம் நிதியுதவி பெறுவதில் கிடுக்கிப்பிடி!
எம்.எல்.ஏ.,க்கள் தங்களின் தொகுதிகளுக்கு, மாநில அரசிடம் நிதியுதவி பெறுவதில் கிடுக்கிப்பிடி!
எம்.எல்.ஏ.,க்கள் தங்களின் தொகுதிகளுக்கு, மாநில அரசிடம் நிதியுதவி பெறுவதில் கிடுக்கிப்பிடி!
ADDED : டிச 29, 2025 06:29 AM

எம்.எல்.ஏ.,க்கள் தங்களின் தொகுதிகளுக்கு, மாநில அரசிடம் நிதியுதவி பெறுவதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்; நெருக்கடியும் தருகின்றனர். ஆனால், சட்டசபை கூட்டத்தொடரில் பங்கேற்று, தொகுதி பிரச்னைகள், மக்களின் தேவைகளை பற்றி பேசுவதில், அக்கறை காட்டுவது இல்லை. பெயரளவுக்கு தலை காட்டி விட்டுச் செல்கின்றனர்.
ஒவ்வொரு முறை சட்டசபை கூட்டத்தொடர் நடக்கும் போதும், எம்.எல்.ஏ.,க்கள் பலரும் வருகை பதிவேட்டில் கையெழுத்து போட்டு விட்டு, சபைக்குள் வராமல் வெளியே செல்கின்றனர். ஒரு வேளை வந்தாலும் முழு நேரமும் அங்கிருப்பது இல்லை. பெயருக்கு சிறிது நேரம் அமர்ந்து விட்டு, எழுந்து செல்கின்றனர். சபாநாயகர் பல முறை கண்டித்தும், எச்சரித்தும் பலன் இல்லை.
எம்.எல்.ஏ.,க்களின் நலனுக்காக சபாநாயகர் காதர், பல வசதிகளை செய்து கொடுத்தார். எம்.எல்.ஏ.,க்கள் பவனை புதுப்பித்து, அடிப்படை வசதிகளை அதிகரித்துள்ளார். அங்கு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
சட்டசபை நடக்கும் போது, சிறிது நேரம் எம்.எல்.ஏ.,க்கள் குட்டித்துாக்கம் போட, லட்சக்கணக்கான ரூபாய் செலவில் சொகுசு இருக்கைகளும் வழங்கினார். உயர் தரமான உணவு வழங்கவும் ஏற்பாடு செய்துள்ளார்.
சட்டசபைக்கு எம்.எல்.ஏ.,க்களின் வருகையை அதிகரிக்க வேண்டும். தொகுதி பிரச்னைகளை பேசி, அரசிடம் தீர்வு காண வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில், சபாநாயகர் அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்தார்.
இது, சர்ச்சைக்கும் காரணமானது. சட்டசபைக்கு வராதவர்களுக்கு சொகுசு வசதிகள் தேவையா. பொதுமக்களின் வரிப்பணத்தை வீணாக செலவிடுவது சரியல்ல என, பலரும் அதிருப்தி தெரிவித்தனர். அதேபோன்று, ஒவ்வொரு முறை சட்டசபை கூட்டத்தொடருக்கும், கோடிக்கணக்கான ரூபாய் செலவிடுவதும் சரியல்ல என்ற கருத்தும் எழுந்துள்ளது.
வசதிகளை அனுபவிக்கும் எம்.எல்.ஏ.,க்கள், சட்டசபைக்கு வருவதில் ஆர்வம் காட்டுவதில்லை. சில நாட்களுக்கு முன், பெலகாவி சுவர்ண விதான்சவுதாவில் நடந்த, குளிர்கால கூட்டத்தொடரிலும், எம்.எல்.ஏ.,க்கள் இதே போன்று நடந்து கொண்டனர்.
இதனால், எரிச்சல் அடைந்துள்ள சபாநாயகர் காதர், எம்.எல்.ஏ.,க்களுக்கு பாடம் புகட்ட முடிவு செய்துள்ளார்.
சட்டசபைக்கு எம்.எல்.ஏ.,க்கள் வருகை மற்றும் அவர்களின் செயல் திறன் அடிப்படையில், அவர்களின் தொகுதிகளுக்கு நிதியுதவி வழங்கும்படி, மாநில அரசுக்கு சிபாரிசு செய்ய திட்டமிட்டுள்ளார். எம்.எல்.ஏ.,க்கள், கூட்டத்தொடர் ஆலோசனை கமிட்டி உறுப்பினர்கள், அமைச்சர்கள், எதிர்க்கட்சி தலைவர், முதல்வருக்கும் பொருந்தும் வகையில், சட்டசபையில் அவர்களின் வருகை, செயல் திறனை ஆய்வு செய்து, அதன் அடிப்படையில் நிதியுதவி வழங்க வேண்டும்.
இதனால், கூட்டத்தொடரில் அவர்களின் வருகை அதிகரிக்கும். கோடிக்கணக்கான ரூபாய் செலவிட்டு, சட்டசபை கூட்டத்தொடர் நடத்துவதற்கும், ஒரு அர்த்தம் இருக்கும் என்பது, சபாநாயகர் காதரின் எண்ணமாகும். இதன் வாயிலாக, 'டிமிக்கி' எம்.எல்.ஏ.,க்களுக்கு பாடம் புகட்டவும் தீர்மானித்துள்ளார்.
ஒவ்வொரு எம்.எல்.ஏ.,க்கும், சட்டசபையில் தங்களின் தொகுதி பிரச்னைகள் பற்றி பேச வேண்டும் என்ற துடிப்பு இருக்கும். ஆனால், வாய்ப்பு கிடைப்பது இல்லை. எங்களின் கேள்வி வரும் போது மட்டுமே பேச முடிகிறது. மற்ற நேரத்தில் வாய்ப்பு கிடைப்பது இல்லை. காலை முதல் மாலை வரை கூட்டத்தொடர் நடத்துவதை விட, அதிகமான நாட்கள் நடத்தினால், அனைவருக்கும் பேச வாய்ப்பு கிடைக்கும். நாங்களும் தொகுதி பிரச்னைகள் குறித்து பேசலாம்.
- ரிஜ்வான் அர்ஷத்,
காங்கிரஸ் எம்.எல்.ஏ.,
****:
எம்.எல்.ஏ.,க்களை சட்டசபைக்கு வரவழைக்க கட்டுப்பாடு விதிப்பதற்கு பதில், தினமும் தவறாமல் கூட்டத்தொடரில் பங்கேற்கும் எம்.எல்.ஏ.,க்களுக்கு கூடுதலாக ஐந்து கோடி ரூபாய் நிதியுதவி வழங்க வேண்டும். வருகை பதிவேட்டில் கையெழுத்திட்டு விட்டு, ஒரு விநாடி அமர்ந்து விட்டு எழுந்து செல்வதை விட, நாள் முழுவதும் கூட்டத்தொடரில் பங்கேற்பதே முக்கியம். எம்.எல்.ஏ.,க்கள் மட்டுமின்றி, அனைத்து அமைச்சர்களும் கட்டாயமாக, சட்டசபை கூட்டத்தொடருக்கு ஆஜராக வேண்டும். எம்.எல்.ஏ.,க்களுக்கு விவாதிக்க வாய்ப்பே கிடைப்பது இல்லை.
- சுரேஷ்கவுடா,
பா.ஜ., - எம்.எல்.ஏ.,
================

