காங்., சிறுபான்மையினர் பிரிவு தலைவர் பதவி ராஜினாமா செய்தார் எம்.எல்.சி., அப்துல் ஜப்பார்
காங்., சிறுபான்மையினர் பிரிவு தலைவர் பதவி ராஜினாமா செய்தார் எம்.எல்.சி., அப்துல் ஜப்பார்
ADDED : ஏப் 12, 2026 01:09 AM

தாவணகெரே: தாவணகெரே தெற்கில், காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக பிரசாரம் செய்யவில்லை என்ற, குற்றச்சாட்டு எழுந்த நிலையில், கர்நாடக காங்கிரஸ் சிறுபான்மையினர் பிரிவு தலைவர் பதவியை, எம்.எல்.சி., அப்துல் ஜப்பார் ராஜினாமா செய்துள்ளார்.
தாவணகெரே தெற்கு தொகுதிக்கு, கடந்த, 9ம் தேதி இடைத்தேர்தல் நடந்தது. காங்கிரஸ் வேட்பாளராக அமைச்சர் மல்லிகார்ஜுன் மகன் சமர்த் போட்டியிட்டார்.
தேர்தலில் போட்டியிட முஸ்லிம் சமூகத்துக்கு, அமைச்சர் ஜமீர் அகமது கான் சீட் கேட்டார். தங்கள் சமூகத்திற்கு சீட் கிடைக்காத கோபத்தில், சமர்த்துக்கு ஆதரவாக அவர் பிரசாரம் செய்யவில்லை.
ஓட்டுப்பதிவு முடிந்த நிலையில், 2023 தேர்தலில் காங்கிரசுக்கு அதிக ஓட்டுகள் கிடைத்த பகுதிகளில், இம்முறை ஓட்டு சதவீதம் குறைந்திருப்பதாக தெரியவந்துள்ளது.
அமைச்சர் ஜமீர் அகமது கான், தாவணகெரே மாவட்டத்தை சேர்ந்த காங்கிரஸ் எம்.எல்.சி., அப்துல் ஜப்பார், முதல்வரின் அரசியல் செயலரான எம்.எல்.சி., நசீர் அகமது ஆகியோர் பிரசாரம் செய்யாததால், இந்த நிலைமை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சிவாவுக்கு கடிதம் நேற்று முன்தினம் ஊடகத்தினரை சந்தித்த எம்.எல்.ஏ., ரிஸ்வான் அர்ஷத், எம்.எல்.சி., சலீம் அகமது ஆகியோர் அமைச்சர் ஜமீர் உட்பட மூன்று பேரின் பெயர்களை குறிப்பிடாமல், சில தலைவர்கள் பிரசாரம் செய்ய வராததால், முஸ்லிம் சமூகத்தினர் ஓட்டு காங்கிரசுக்கு கணிசமாக கிடைக்கவில்லை என்று குற்றஞ்சாட்டினர்.
இதனால், அதிருப்தி அடைந்த எம்.எல்.சி., அப்துல் ஜப்பார், கர்நாடக காங்கிரஸ் சிறுபான்மையினர் பிரிவு தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதுதொடர்பான கடிதத்தை, கட்சி தலைவரான துணை முதல்வர் சிவகுமாருக்கும் அனுப்பி உள்ளார்.
அப்துல் ஜப்பார் கூறியதாவது:
தாவணகெரே தெற்கில் காங்கிரஸ் வேட்பாளருக்காக, நான் பிரசாரம் செய்யவில்லை என்று சிலர் கூறுகின்றனர். அவர்கள் இங்கேயே இருந்து, 20 நாட்கள் என்ன பிரசாரம் செய்தனர். ஜமீர் அகமது கான், தாவணகெரே வந்து இரண்டு மணி நேரம் மட்டுமே இருந்தார். அவர் வந்ததால் தான், முஸ்லிம் ஓட்டுகள் காங்கிரசுக்கு கிடைத்துள்ளன.
கட்சி விசுவாசம் மூத்த தலைவரான என்னை ஒரு முறை கூட சந்தித்து, பிரசாரம் செய்ய வாருங்கள் என்று யாரும் அழைக்கவில்லை. நான் என்ன தவறு செய்தேன் என்றும் தெரியவில்லை. முஸ்லிம் சமூகத்திற்கு நல்லது தான் செய்து உள்ளேன்.
கட்சிக்கும் விசுவாசமாக இருந்து உள்ளேன். என் மீது வீண் பழி போடப்படுவதை நான் விரும்பவில்லை. இதனால், கர்நாடக காங்கிரஸ் சிறுபான்மையினர் பிரிவு தலைவர் பதவியை ராஜினாமா செய்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கிடையில், கர்நாடக காங்கிரஸ் மேலிட இணை பொறுப்பாளர் அபிஷேக் தத்தும், தாவணகெரே தெற்கில் ஓட்டு குறைந்தது பற்றி, கட்சி மேலிடத்திற்கு கடிதம் எழுதி உள்ளார்.
அந்த கடிதத்தில், அமைச்சர் ஜமீர் அகமது கான் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அமைச்சரவை மாற்றம் நடந்தால், ஜமீரின் பதவி பறி போக வாய்ப்பு உள்ளதாகவும், காங்கிரஸ் வட்டாரத்தில் பேச்சு எழுந்து உள்ளது.
