தமிழர்கள் சுட்டு கொல்லப்பட்ட நாளில் தடுப்பு முகாம்கள் மீது கும்பல் தாக்குதல்
தமிழர்கள் சுட்டு கொல்லப்பட்ட நாளில் தடுப்பு முகாம்கள் மீது கும்பல் தாக்குதல்
ADDED : ஆக 19, 2026 11:19 PM

பெங்களூரு: ஹ னுார் வனப்பகுதியில் மூன்று தமிழர்கள் சுட்டு கொல்லப்பட்ட அன்றே, ஆறு வன வேட்டை தடுப்பு முகாம்கள் மீது, டெட்டனேட்டர்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்கள் குடும்பத்தினர் தாக்குதல் நடத்தினரா என்று விசாரணை நடக்கிறது.
சாம்ராஜ்நகர் ஹனுார் தாலுகா காவிரி வனவிலங்கு சரணாலயத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில், கடந்த 15ம் தேதி அதிகாலை வனத்துறையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில், ஹனுார் தாலுகா தோமியார்பாளையா கிராமத்தில் வசித்த தமிழர்களான, அந்தோணிசாமி, 50, ஜான் ரோஸ் பீட்டர், 45, குமார், 33, ஆகியோர் உயிரிழந்தனர்.
அப்பாவிகளை சுட்டு கொன்றதாக வனத்துறையினர் மீது குற்றச்சாட்டு எழுந்த நிலையில், வனவிலங்குகளை வேட்டையாடிவர்கள் சுட்டு கொல்லப்பட்டதாக அரசு தரப்பு கூறுகிறது.
இந்த விவகாரத்தில் கர்நாடக, தமிழக அரசுகள் இடையில் மோதல் போக்கு ஆரம்பித்துள்ளது.
ஜெலட்டின் குச்சிகள் இந்நிலையில், சம்பவம் நடந்து நான்கு நாட்களுக்கு பின், கர்நாடக வனத்துறை நேற்று அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதாவது, மூன்று பேரும் சுட்டு கொல்லப்பட்ட அன்றே காவிரி வனவிலங்கு சரணாலயத்திற்கு உட்பட்ட மிஞ்சினாரேஹால்லா, ஒல்லேமரடா ஹட்டி, புடிகெரே, மிஞ்சினஹள்ளி வனப்பகுதியில் உள்ள, ஆறு வன வேட்டை தடுப்பு முகாம்களை, டெட்டனேட்டர்கள், ஜெலட்டின் குச்சிகள் மூலம் தாக்கி, மர்ம நபர்கள் சேதப்படுத்தியதாக கூறியுள்ளனர்.
இதுகுறித்து, வன அதிகாரி மரிசாமி கூறியதாவது:
கடந்த 15ம் தேதி சுதந்திர தினம் கொண்டாடப்பட்டதால், தேசிய கொடி ஏற்ற வன ஊழியர்கள் சென்று விடுவர்.
வனப்பகுதிக்குள் யாரும் இருக்க மாட்டார்கள் என்ற நோக்கத்தில், வேட்டைக்காரர்கள் வனப்பகுதியில், 14ம் தேதி இரவே நுழைந்தனர்.
ஹோலேமுரிதட்டி பகுதியில் துப்பாக்கி சுடும் சத்தம் கேட்ட போது, வேட்டை தடுப்பு முகாமில் இருந்த வன ஊழியர்கள் சென்று பார்த்தனர்.
அப்போது வனத்துறைக்கும், வேட்டைக்காரர்களுக்கும் இடையே ஏற்பட்ட துப்பாக்கி சண்டையில், வேட்டைக்காரர்கள் மூன்று பேர் இறந்தனர்.
அன்றைய தினமே வனப்பகுதிக்குள் இருந்த ஆறு வன வேட்டை தடுப்பு முகாம்களை, டெட்டனேட்டர்கள், ஜெலட்டின் குச்சிகள் மூலம் தாக்கி, மர்ம நபர்கள் சேதப்படுத்தினர். யார் இப்படி செய்தனர் என்று விசாரணை நடக்கிறது.
இவ்வாறு கூறினார்.
அறிக்கை வரட்டும் முதல்வர் சிவகுமார் கூறுகையில், ''ஆறு வன வேட்டை தடுப்பு முகாம்கள் மீது டெட்டனேட்டர்கள் மூலம் தாக்கியது பற்றி எனக்கும் தகவல் கிடைத்துள்ளது. விசாரணை நடக்கிறது. அறிக்கை வந்ததும் பேசுகிறேன்,'' என்றார்.
வன அமைச்சர் ராமலிங்கரெட்டி கூறுகையில், ''வன வேட்டை தடுப்பு முகாம்கள் மீது டெட்டனேட்டர்கள் மூலம் தாக்குதல் நடத்தியது பற்றி விசாரணை நடக்கிறது. இறந்தவர்களின் உறவினர்கள் தாக்கினரா அல்லது வேறு யாரும் செய்தனரா என்பது பற்றி விசாரணைக்கு பின் தெரியவரும்,'' என்றார்.
