சிறையில் மொபைல் போன் கண்டுபிடிப்பு: 25 கைதிகள் அறைக்கு பிரஜ்வல் மாற்றம்
சிறையில் மொபைல் போன் கண்டுபிடிப்பு: 25 கைதிகள் அறைக்கு பிரஜ்வல் மாற்றம்
ADDED : ஆக 18, 2026 08:22 PM

பெங்களூரு: பாலியல் பலாத்கார வழக்கில், சிறை தண்டனை அனுபவிக்கும் முன்னாள் எம்.பி., பிரஜவல் ரேவண்ணாவை, 25 கைதிகள் உள்ள அறைக்கு மாற்றியுள்ளனர். இங்கு சிலருக்கு நோய் இருப்பதால், தனக்கு தொற்றும் என, அவர் பீதியடைந்துள்ளார்.
ஹாசன் முன்னாள் எம்.பி., பிரஜ்வல் ரேவண்ணா, தன் வீட்டு பணிப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் கைதாகியுள்ளார். இவருக்கு மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு நீதிமன்றம், ஆயுள் தண்டனை விதித்துள்ளது. அதையடுத்து, பெங்களூரின் பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில், தண்டனை அனுபவிக்கிறார்.
சிறையில் இவருக்கு சொகுசு வசதிகள் அளிப்பதாக, குற்றச்சாட்டு எழுந்தது. சில நாட்களுக்கு முன், சி.சி.பி., அதிகாரிகள், பரப்பன அக்ரஹாரா சிறையில் சோத னை நடத்தினர்.
அப்போது பிரஜ்வல் உட்பட, இரண்டு கைதிகளிடம் மொபைல் போன்மற்றும் பென் டிரைவ் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவர் மொபைல் போனில் பேசும் வீடியோவும் பரவியது. இது சிறைத்துறைக்கு பெரும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தியது.
இதையடுத்து, பிரஜ்வல் ரேவண்ணாவை, சிறப்பு பாதுகாப்பு பிரிவில் இருந்து, சாதாரண கைதிகள் உள்ள அறைக்கு சிறை அதிகாரிகள் மாற்றினர். அங்கு, 25 கைதிகள் உள்ளனர். சிலருக்கு அரிப்பு மற்றும் இருமல் நோய் உள்ளது. அவர்களிடம் இருந்து, தனக்கும் நோய் பரவும் என, பிரஜ்வல் கலக்கம் அடைந்துள்ளார்.
இது குறித்து, சிறை அதிகாரிகளிடம் அவர், ' நான் இருக்கும் அறையில், 25 கைதிகள் உள்ளனர். சிலருக்கு அரிப்பு, இருமல் உள்ளது.
'இது எனக்கும் தொற்றும் என, அஞ்சுகிறேன். அனைவருக்கும் ஒரே ஒரு கழிப்பறை உள்ளது. என்னால் இந்த அறையில் இருக்க முடியாது. வேறு அறைக்கு என்னை மாற்றுங்கள் ' என கோரியுள்ளார்.
ஆனால் அதிகாரிகள், 'தற்போதைக்கு எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது. வரும் நாட்களில் இதுகுறித்து ஆலோசிக்கப்படும்' என கூறியுள்ளனர்.
