கர்நாடக பா.ஜ., வுக்கு புதிய பொறுப்பாளர் நியமிக்கப்பட வாய்ப்பு
கர்நாடக பா.ஜ., வுக்கு புதிய பொறுப்பாளர் நியமிக்கப்பட வாய்ப்பு
ADDED : ஆக 18, 2026 08:21 PM

பெங்களூரு: பா.ஜ., தேசிய நிர்வாகிகள் பட்டியலில் இருந்து ராதா மோகன்தாஸ் அகர்வால் நீக்கப்பட்டுள்ளார். இதனால், கர்நாடக பா.ஜ.,வுக்கு விரைவில் புதிய பொறுப்பாளர் நியமிக்கப்பட வாய்ப்புள்ளது.
கடந்த, 2024ல் நடந்த லோக்சபா தேர்தலின் போது, இவர், கர்நாடக பா.ஜ., பொறுப்பாளராக பதவி ஏற்றுக்கொண்டார். இவர் கட்சியை பலப்படுத்துவதில், ஆர்வம் காட்டவில்லை.
இவரது செயல் திறன் குறித்து, மூத்த தலைவர்கள் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில், பகிரங்கமாகவே அதிருப்தி தெரிவித்தனர். 'மாநிலத்துக்கு வருவதில்லை. உட்கட்சி பூசலை சரி செய்வதில், ஆர்வம் காட்டவில்லை' என, பலரும் குற்றம்சாட்டினர்.
எனினும், பல விஷயங்களில், ராதா மோகன்தாஸ் அகர்வால் எடுத்த, கடினமான நடவடிக்கையை பலர் ஆதரித்தனர்.
தற்போது, நிதின்கட்கரி தலைமையில் அமைக்கப்பட்ட, பா.ஜ.,வின் புதிய நிர்வாகிகள் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் ராதா மோகன்தாஸ் அகர்வாலின் பெயர் இல்லை. தேசிய அளவிலான பொறுப்பில் இருந்து, அவர் நீக்கப்பட்டுள்ளதால் கர்நாடக பொறுப்பாளர் பதவியையும் இழந்துள்ளார்.
இன்னும் சில நாட்களில், புதிய பொறுப்பாளர் நியமிக்கப்படுவார் என, எதிர்பார்க்கப்படுகிறது.
சட்டசபை தேர்தலுக்கு, இன்னும் இரண்டு ஆண்டுகளே உள்ளன. உட்கட்சி பூசல் அதிகரித்துள்ளது. புதிய பொறுப்பாளருக்கு அடுக்கடுக்கான சவால்கள் காத்திருக்கின்றன. நிர்வாக திறன் கொண்ட தலைவரே, மாநில பொறுப்பாளராக நியமிக்கப்படுவார் என, கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
