ADDED : ஜூலை 09, 2026 09:14 PM

- நமது நிருபர் -
பெங்களூரின் பிரசித்தி பெற்ற, சின்னச்சாமி விளையாட்டு அரங்கில், அதி நவீன, எல்.இ.டி., பிளட் லைட்டிங் வசதி செய்யப்பட்டுள்ளது. இதற்காக, கே.எஸ்.சி.ஏ., எனும் கர்நாடக மாநில கிரிக்கெட் அசோசியேஷன், ஐந்து கோடி ரூபாய் செலவிட்டுள்ளது.
இது குறித்து, கே.எஸ்.சி.ஏ., அதிகாரிகள் கூறியதாவது:
பெங்களூரின் சின்னச்சாமி விளையாட்டு அரங்கத்தில், 2010ம் ஆண்டு முதல் பயன்படுத்தபட்ட, எல்.இ.டி., மின் விளக்குகள் பழையதாகி விட்டன. இவற்றை அகற்றிவிட்டு, தற்போது புதிதாக, எல்.இ.டி., பிளட் மின் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. இவைகள் உயர் தரமானவை. அதிநவீன தொழில்நுட்பம் கொண்டவை.
சின்னச்சாமி விளையாட்டு அரங்கில், ஐந்து கோடி ரூபாய் செலவில், அதிநவீன தொழில்நுட்பம் கொண்ட எல்.இ.டி., விளக்குகள் பொருத்தும் பணிகளின் பொறுப்பை, ஹாவல்ஸ் இந்தியா லிமிடெட் நிறுவனம் ஏற்றிருந்தது.
பணிகளையும் நன்றாக முடித்துள்ளது. புதிய பிளட் லைட்டிங் வசதி செய்துள்ளதால், அதிக வெளிச்சமாக இருக்கும். இரவு நேரத்தில் போட்டிகள் நடந்தால், விளையாட்டு வீரர்களுக்கும், பார்வையாளர்களுக்கும் பகல் நேரத்தில் போட்டி நடப்பதை போன்ற அனுபவத்தை அளிக்கும்.
மணிக்கு, 150 கி.மீ.,க்கும் அதிகமான வேகத்தில் வரும் கிரிக்கெட் பந்தை, ஹெச்.டி., அல்ட்ரா ஹெச்.டி., சூப்பர் ஸ்லோ - மோஷன் கேமராக்களில், தெளிவாக பதிவு செய்ய, லைட்டிங் வசதி உதவியாக இருக்கும்.
பழைய மின் விளக்குகளுடன் ஒப்பிட்டால், தற்போது பொருத்திய புதிய எல்.இ.டி., மின் விளக்குகளால், 40 சதவீதம் மின்சாரம் மிச்சமாகும்.
சின்னச்சாமி விளையாட்டு அரங்கில், மஹாராஷ்டிரா டிராபி டி - 20 இறுதிக்கட்ட போட்டிகள் நடக்கின்றன. இப்போட்டிகள் ஜூலை 12ம் தேதி வரை நடக்கவுள்ளன. இந்த போட்டிகளும், புதிய, எல்.இ.டி., லைட்டிங் வெளிச்சத்தில் நடக்கின்றன.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
