ADDED : ஏப் 11, 2026 11:53 PM

இன்றைய கால கட்டத்தில், அவரவர் மதங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்களே அதிகம். இதனால், கலவரம் ஏற்பட்டாலும் பொருட்படுத்துவதில்லை. இப்படிப்பட்டவர்களுக்கு இடையே, 48 ஆண்டுகளாக, முஸ்லிம் நபர் ஒருவர் மத நல்லிணக்கத்துக்கு உதாரணமாக வாழ்கிறார்.
தட்சிண கன்னடா மாவட்டம், மங்களூரின் அம்முஞ்சே கல்யே கிராமத்தில் வசிப்பவர் முகமது, 74. இவர், மங்களூரின் பிரசித்தி பெற்ற பொளலி ராஜராஜேஸ்வரி கோவில் வளாகத்தில் உள்ள கூட்டுறவு சங்கத்தில் விற்பனை நிர்வாகியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். பல ஆண்டுகளாக அங்கு பணியாற்றியதால், கோவில் நிர்வாகத்தினருடன் நல்லுறவில் இருந்தார்.
கடந்த, 50 ஆண்டுகளுக்கு முன், ராஜராஜேஸ்வரி கோவிலுக்கு புதிதாக ரதம் உருவாக்கப்பட்டது. மரத்தொழிலில் முகமதுவுக்கு அபார ஞானம் உள்ளதை கவனித்த அதிகாரிகள், அவரிடம் ஆலோசனை பெற்றுக்கொண்டனர்.
அவரது திறமையை பார்த்து, ஆண்டு தோறும் ரதத்தை நிர்வகிக்கும் பொறுப்பை அவரிடமே ஒப்படைத்தனர். அன்று முதல் அவர் அந்த பொறுப்பை திறம்பட செய்து வருகிறார்.
அதிக பாரம் ஆண்டு தோறும் திருவிழாவின் போது, ரத உத்சவத்துக்கு ரதத்தை சரி செய்து தயாராக்குகிறார். ரதத்தை பாதுகாப்பாக கொண்டு செல்வதும், கட்டுப்படுத்துவதும் இவரது பொறுப்பு. அதிக பாரம் உடைய ரதத்தை, யாருக்கும் பாதிப்பில்லாமல் கட்டுப்படுத்துவது, அவ்வளவு எளிதான விஷயம் அல்ல. ஆனால், இதை முகமது சிறப்பாக செய்து வருகிறார்.
இதுவரை ஒரு சிறு அசம்பாவிதமும் நடந்தது இல்லை. ஜாதி, மதம் பேதமின்றி இவர் செய்து வரும் சேவையை, பொதுமக்களும், அதிகாரிகளும் பாராட்டுகின்றனர். நேற்று முன்தினம் பொளலி ராஜராஜேஸ்வரி கோவிலில், ரத உத்சவம் வெற்றிகரமாக நடந்தது. அதில், முகமதுவுக்கும் முக்கிய பங்குள்ளது.
இது குறித்து, அவர் கூறியதாவது:
கோவில் நிர்வாகம் என் மீது நம்பிக்கை வைத்து, ரதத்தை நிர்வகிக்கும் பொறுப்பை என்னிடம் ஒப்படைத்துள்ளது. திருவிழாவின் போது, ரதம் கோவிலை சுற்றி ஒரு முறை வலம் வர வேண்டும். இதற்கு முன் சாலைகளில் சேறு இருந்ததால், ரதத்தை நகர்த்துவது மிகவும் கஷ்டமாக இருந்தது.
தொழிற்நுட்ப திறனால், ரதத்தை எளிதாக கட்டுப்படுத்தினேன். ரதத்தை நகர்த்தி செல்லும் போது, பல சவால்களை எதிர்கொண்டோம். ரத உத்சவத்துக்கு ரதத்தை தயார் செய்வதும் கஷ்டமான பணி தான். மரப்பலகைகள், கம்பிகள் உட்பட, அனைத்தையும் சரியாக பொருத்தி, திருவிழாவுக்கு ரதத்தை தயார் செய்ய வேண்டும்.
உடல் நலம் எனக்கும், கோவில் நிர்வாகத்துக்கும் இடையே இருந்த நம்பிக்கையே, இந்த ரதத்தை இத்தனை ஆண்டுகளாக, சிறப்பாக நிர்வகிக்க உதவியாக உள்ளது. நான் வீட்டில் இருப்பதை விட கோவிலில் அதிக நேரம் கழிக்கிறேன். திருவிழாவின் போது, இரவும், பகலும் இங்குதான் இருப்பேன். எனக்கு ரத்த அழுத்தம், நீரிழிவு இருந்தாலும் உற்சாகமாக பணியாற்றுகிறேன்.
நான் மட்டுமின்றி, என் குடும்பத்தினரும் கோவிலுக்கு வரும் போது, அனைவரும் எங்களுக்கு அன்பான வரவேற்பு அளிக்கின்றனர். கஷ்ட காலத்தில் வேறு சமுதாயத்தின் நண்பர்கள் உதவிக்கு வருகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -
