சிக்கமகளூரில் குரங்கு காய்ச்சல் சுகாதார அதிகாரிகள் உஷார்
சிக்கமகளூரில் குரங்கு காய்ச்சல் சுகாதார அதிகாரிகள் உஷார்
UPDATED : நவ 19, 2026 12:00 AM
ADDED : நவ 18, 2026 08:02 PM
சிக்கமகளூரு: சிக்கமகளூரில், 72 பேருக்கு, குரங்கு காய்ச்சல் தென்பட்டுள்ளதால் சுகாதாரத்துறை உஷாராகியுள்ளது. வனப்பகுதிக்கு செல்வதை தவிர்க்கும்படி, கிராமத்தினருக்கு சுகாதாரத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து, சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
சிக்கமகளூரு, என்.ஆர்.புரா, கொப்பா, சிருங்கேரி என, சிக்கமகளூரு மாவட்டத்தின், நான்கு தாலுகாக்கள் குரங்கு காய்ச்சல் பீதி உள்ள பகுதிகளாகும். குளிர்காலத்தில் இப்பகுதிகளில், குரங்கு காய்ச்சல் வேகமாக பரவுவது வழக்கம்.
எனவே, சுகாதாரத்துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துள்ளது. மாவட்ட சுகாதாரத்துறை ஏற்கனவே, நோய் அறிகுறி தென்பட்ட 3,098 பேருக்கு ரத்த பரிசோதனை செய்தது. இதில், 72 பேருக்கு குரங்கு காய்ச்சல் உறுதியாகியுள்ளது.
ஆறு பேர் என்.ஆர்.புராவில், 64 பேர் கொப்பாவில், இருவர் மணிப்பால் மருத்துவமனையிலும், சிகிச்சை பெறுகின்றனர்.
வனப்பகுதி எல்லையில் உள்ள கிராமத்தினர், மிகுந்த எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம். முடிந்த வரை வனப்பகுதிக்கு செல்வதை தவிர்ப்பது நல்லது.
ஒருவேளை வனப்பகுதிக்கு சென்று வந்தால், அணிந்துள்ள உடைகளை வென்னீரில் நனைத்து, சோப்பு போட்டு குளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
